2015-03-11 16:52:00

மும்பையில் 'இறைவனுடன் 24 மணி நேரங்கள்'


மார்ச்,11,2015. கடவுளின் கருணையை அனைவரும் சுவைக்கும் வகையில் கோவில்கள் அனைத்தையும் திறந்து வைத்து, நற்கருணை ஆராதனையில் மக்கள் ஈடுபட, அருள் பணியாளர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று மும்பை பேராயர், கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

'இறைவனுடன் 24 மணி நேரங்கள்' என்ற கருத்துடன் இவ்வெள்ளி, சனி ஆகிய நாட்களில் திருவழிபாடுகளும், ஒப்புரவு அருள் அடையாளமும் நடைபெறுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பினையொட்டி கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மும்பை அருள் பணியாளர்களுக்கு இந்த அறிக்கையை அளித்துள்ளார்.

"கருணையில் சிறந்த கடவுள்" என்ற கருத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, மார்ச் 13, இவ்வெள்ளியன்று மாலை 7.30 மணிக்குத் துவங்கி, அடுத்தநாள் மாலை 7.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியுடன் நிறைவேறும் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

உலகமயமாகிவரும் அக்கறையின்மை என்ற குறையை நீக்க, இந்த 24 மணி நேர செபத்தில், உலகெங்கும் துன்புறுவோருக்கு சிறப்பான செபங்களை எழுப்பவேண்டும் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.