2015-03-11 16:43:00

பெண்கள் குறித்து ஐ.நா.வில் திருப்பீடத்தின் கருத்தரங்கு


மார்ச்,11,2015. நியூ யார்க் நகரில் நடைபெறும் ஐ.நா.அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பாக பங்கேற்கும் பணியாளர்கள் இணைந்து, "மனித மாண்பை வளர்க்கும் பெண்கள்" என்ற தலைப்பில், மார்ச் 18, அடுத்த புதனன்று கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளனர்.

Haiti நாட்டின் முன்னாள் பிரதமர், பேராசிரியர் Michèle Pierre-Louis, CRS எனப்படும் கத்தோலிக்கத் துயர்துடைப்புப் பணிகள் இயக்கத்தின் தலைவர், பேராசிரியர் Carolyn Woo, Texas நகரில் பணியாற்றிவரும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் தலைவர், அருள் சகோதரி, Norma  Pimentel ஆகியோர் இக்கருத்தரங்கில் உரையாற்றுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 8ம் தேதி சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக மகளிர் நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கு, பெண்களின் உள்ளார்ந்த சக்தியை வெளிச்சமிட்டுக் காட்டும் ஒரு முயற்சியாக அமையும் என்று கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளவர்கள் கூறினர்.

மிகவும் குழப்பமானச் சூழல்களிலும் தெளிவாகச் சிந்திக்கும் திறன் பெற்றவர்கள் பெண்கள் என்பதால், அவர்கள் அற்புத அறிவுத்திறன் பெற்றவர்கள் என்று மறைந்தத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் கூறியுள்ளதும், கடவுளின் கனிவான முகத்தை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துவது எவ்விதம் என்பதை பெண்கள் உணர்ந்தவர்கள் என்பதால், அவர்களை ஒதுக்கிவிடாமல், இணைத்துச் செல்வதே சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு சிறந்த வழி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.