2015-03-11 17:11:00

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை


மார்ச் 11,2015. குடும்பம் குறித்த தன் மறைக்கல்வி உரையில் கடந்த வாரம், குடும்பத்தில் தாத்தா பாட்டிகளின் இடம் குறித்த தன் போதனைகளைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரமும் அதனைத் தொடர்ந்தார்.

அன்பு சகோதர சகோதரிகளே! குடும்பம் குறித்த நம் மறைக்கல்வி உரையில் இன்று நம் தாத்தா பாட்டிகளின் பங்கு குறித்து நோக்குவோம். கடவுளின் வாக்குறுதியில் முழு நம்பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்த சிமியோன் மற்றும் அன்னா எனும் இரு முதியோரை நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். இவர்கள் காத்திருந்த வாக்குறுதி, இவர்கள் எதிபாராத வேளையில், அதாவது, வயது முதிர்ந்த காலத்தில் நிறைவேறுகிறது. சிமியோனும் அன்னாவும் முதியோரின் ஆன்மீகத்திற்கான பெரும் எடுத்துக்காட்டுகளாக உள்ளனர். இவர்கள் செபத்தின் மைய நிலையைச் சுட்டிக்காட்டி நிற்கின்றனர். நாம் உற்றுப்பார்த்தோமானால், தாத்தா பாட்டிகளின் செபம் என்பது குடும்பங்களுக்கும் திருஅவைக்கும் ஒரு மாபெரும் அருளாக உள்ளது.  செபத்தில், முதியோர், இறைவனின் கொடைகளுக்காக நன்றி கூறுகின்றனர். இந்த நன்றியறிவித்தல் என்பது பலவேளைகளில் மக்களால் மறக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இளைய சமூகத்தின் நம்பிக்கைகள் மற்றும் தேவைகளுக்காக முதியோரே இறைவனிடம் பரிந்துரைக்கின்றனர். அதேவேளை, கடந்த தலைமுறைகளின் தியாகங்களையும் நினைவுகளையும் இறைவன் முன் உயர்த்திப் பிடிப்பவர்கள் முதியோரே. தூய்மையாக்கும் வல்லமையுடைய விசுவாசத்தையும் செபத்தையும் கொண்டிருக்கும் முதியோர், தன்னையே பிறருக்காக தியாகம் செய்யும் அன்பிலும், பிறருக்கான அக்கறையிலும் காணப்படும் வாழ்வின் உண்மை அர்த்தத்தை இளய சமுதாயத்திற்கு கற்பிக்கும் ஞானமுள்ள வழிகளை அறிந்திருக்கின்றனர். இளையோர், தங்கள் தாத்தா பாட்டிகளுக்கு செவிமடுக்கட்டும். என் குருத்துவ திருநிலைப்பாட்டின்போது என் பாட்டி எனக்கு எழுதிய வார்த்தைகளை இன்றும் நான் நினைவில் வைத்துள்ளேன். அவ்வார்த்தைகளை என்னோடு இன்றும் வைத்துள்ளேன். அதை என் தினசரி செபப் புத்தகத்தில் பத்திரமாக வைத்துள்ளேன். முதியோருக்கு உரிய இடத்தைக் கொடுக்காமல், ஏன், சிலவேளைகளில் அவர்களை ஒதுக்கிவைக்கும் இன்றைய சமூகத்தில், திருஅவையானது, முதியோரின் பங்களிப்பையும் அவர்களின் கொடைகளையும் அங்கீகரிப்பதோடு, தலைமுறைகளுக்கிடையே பலன்தரும் பேச்சுவார்த்தைகளை வளர்ப்பதற்கு முதியோர்களுக்கு உதவட்டும்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவிலாநகர் புனித தெரேசா பிறந்ததன் 500ம் ஆண்டு, இம்மாதம் திருஅவையில் சிறப்பிக்கப்படுவது பற்றிக் குறிப்பிட்டு, அப்புனிதரின் ஆன்மீகப்பலம் நமக்கொரு தூண்டுதலாக இருப்பதாக என எடுத்துரைத்தார். அவிலாநகர் புனித தெரேசா அவர்கள், தன் இறுதி காலத்தில் பயன்படுத்திய ஊன்றுகோல், 5 கண்டங்களின் 30 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இப்புதனன்று திருத்தந்தையின் புதன் மறையுரையின்போது வத்திக்கானுக்குக் கொணரப்பட்டது. 1515ம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்த அவிலாநகர் புனித தெரேசா அவர்களின் ஊன்றுகோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி, தன் உலகப் பயணத்தைத் துவக்கியது. இப்புனிதப் பொருள் இம்மாதம் 28ம் தேதி இப்புனிதரின் பிறந்த நகரான அவிலா சென்றடையும்.

இந்த மறைக்கல்வி உரையின் இறுதியில் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இப்புதனன்று, கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள், திருத்தந்தையை, மறைக்கல்வி உரைக்குப் பின் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.