2015-03-11 16:30:00

திருத்தந்தை : என் வாழ்வு இறைவன் கைகளில் உள்ளது


மார்ச்,11,2015. தன் வாழ்வு இறைவன் கைகளில் உள்ளது என்றும், அவருக்கு விருப்பம் எனில், தன் வாழ்வை எடுத்துக் கொள்ளலாம்; இருந்தாலும், தனக்கு உடல் துன்பம் அதிகம் இல்லாமல் இறைவன் தன்னை  எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதும் தன் செபம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் அளித்த ஒரு பேட்டியில் கூறினார்.

அர்ஜென்டீனா நாட்டின் Buenos Aires புறநகரில் இயங்கிவரும் La Carcova News என்ற ஒரு மாத இதழுக்கு திருத்தந்தை அளித்த பேட்டியின் இறுதியில், அண்மையில் அவரது உயிருக்கு எழுந்துள்ள ஆபத்துக்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, திருத்தந்தை இவ்வாறு பதில் அளித்தார்.

அர்ஜென்டீனாவில் "Gran Buenos Aires" என்ற பெயரில் இயங்கிவரும் ஒரு சிறுநகர் குழுவினரால் துவக்கப்பட்டுள்ள La Carcova மாத இதழ், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப் பணியில் ஈராண்டுகள் நிறைவு செய்யும் தருணத்தையொட்டி, அவரிடம் இந்தப் பேட்டியை மேற்கொண்டது.

சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் மனிதர்கள், போதைப்பொருள் பயன்பாடு, கணணி வழியே இளையோரைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள கற்பனை உலகம் போன்றவற்றைக் குறித்து, எளிய மக்கள் எழுப்பியக் கேள்விகளுக்கு திருத்தந்தை தன் பதில்களை அளித்துள்ளார்.

அர்ஜென்டீனா நாடு இவ்வாண்டு சந்திக்கவிருக்கும் தேர்தல்கள் குறித்து திருத்தந்தையின் கருத்துக்கள் என்ன என்ற கேள்விக்கு, தெளிவான எண்ணங்கள் கொண்டோரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும், நேர்மையுடன் செயலாற்றும் தலைவர்கள் தேவை என்றும் திருத்தந்தை பதில் அளித்தார்.

அர்ஜென்டீனா நாட்டுக்கு, திருத்தந்தை எப்போது பயணம் மேற்கொள்வார் என்ற கேள்விக்கு, இறைவனின் விருப்பம் இருந்தால், ஏனைய திட்டங்கள் இயைந்து வந்தால், 2016ம் ஆண்டின் துவக்கத்தில் தான் அர்ஜென்டீனா நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பேட்டியின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNA/ CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.