2015-03-11 17:35:00

அமைதி ஆர்வலர்கள் : 1975ல் நொபெல் அமைதி விருது


மார்ச்,11,2015. சோவியத் ஹைட்ரஜன் அணு குண்டின் தந்தை என்றழைக்கப்படும் Andrei Dmitrievich Sakharov அவர்களுக்கு 1975ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராகச் செயல்பட்டது, மற்றும், மனித உரிமைகளுக்காக அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி இவ்விருது அளிக்கப்பட்டது. இவ்விருது இவருக்கு அறிவிக்கப்பட்டவுடன் சோவியத் அதிகாரிகள் கடும் கோபம்கொண்டு இவர் இவ்விருதைப் பெறுவதற்கு ஆஸ்லோ நகர் செல்வதற்குத் தடை விதித்தனர். இவருக்குப் பதிலாக இவரது பெயரில், இவரது மனைவி Jelena Bonner அவர்கள் இவ்விருதைப் பெறார். இதைத் தொடர்ந்து, Sakharov அவர்களுக்கு சோவியத் வழங்கியிருந்த அனைத்து மதிப்புமிக்க பட்டங்களையும் பறித்துக்கொண்டது. இத்தம்பதியர் பல ஆண்டுகள் Gorkij நகரில் அரசின் கடும் கண்காணிப்பில் இருந்தனர். 1985ம் ஆண்டில் Mikhail Gorbachev அவர்கள் பதவிக்கு வந்த பின்னர், இத்தம்பதியர் மாஸ்கோ வருவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மாஸ்கோவில் 1921ம் ஆண்டு மே 21ம் தேதி பிறந்த Andrei Sakharov அவர்களின் தந்தை Dmitri Ivanovich Sakharov அவர்கள், மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆசிரியர் மற்றும் பியானோ இசைக்கருவி வாசிப்பதில் வல்லுனர். Andrei Sakharov அவர்கள் இளம் வயதிலேயே கல்வியில், சிறப்பாக, கோட்பாட்டு இயற்பியலில் சிறந்து விளங்கினார். 1947ம் ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் காஸ்மிக் கதிர்கள் குறித்த ஆய்வில் இறங்கினார். 1948ம் ஆண்டு முதல், நொபெல் விருது பெற்ற Igor Tamm அவர்களின் மேற்பார்வையில் சோவியத் ஹைட்ரஜன் அணு குண்டு வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டார். 1949ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி சோவியத் யூனியன் முதல் அணுகுண்டு பரிசோதனையை நடத்தியது.

இவர் மிகவும் தேப்பற்று மிக்கவர். அணு ஆயுதங்களை அமெரிக்கா மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை தகர்ப்பது மிக முக்கியம் என இவர் கருதினார். ஆயுதப் போட்டியின் விளைவுகளுக்கு எதிராக 1950களின் இறுதியிலிருந்து எச்சரிக்கை அறிக்கைகளை விடுத்தார். 1960கள் மற்றும் 1970களில் சோவியத் அமைப்புமுறை குறித்து குரல் எழுப்பினார். இதுவே இவரை மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் தலையிட வைத்தது. சோவியத் யூனியனின் குடிமக்களின் சுதந்திரத்துக்காகவும், சீர்திருத்தத்துக்காகவும் போராடுபவரானார். இதுவே நாட்டின் அடக்குமுறையை இவர் எதிர்கொள்வதற்கு காரணமானது, அதேநேரம் 1975ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதுக்கும் காரணமானது.

அணுசக்தி சோதனைகள், தீங்கு நிறைந்தவை என்ற கருத்து Sakharov அவர்களிடம் இருந்ததேயில்லை. ஏனெனில் அவர், அணுசக்தி, அமைதி வழிகளிலேயே பயன்படுத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மேலும், அணுசக்தி சரிசம நிலை உலகில் இருந்தால், போர் குறித்த அச்சம் நிலவாது என்றும் அவர் நம்பினார். நம்முடைய பொறுப்புணர்வுகள், சகிப்புத் தன்மைகள், ஒருவர் ஒருவர் மீதான நம்பிக்கை, சுயநலப்போக்குகள் போன்றவை குறித்து சிந்தித்து, பொதுநலன் குறித்த தீர்வு காணும்போது அணுசக்தி குறித்த அச்சமிருக்காது என்றவர் Sakharov.

1970ம் ஆண்டு Valery Chalidze  மற்றும் Andrei Tverdokhlebovடன் இணைந்து சோவியத் யூனியனில் மனித உரிமைகள் அவை ஒன்றைத் துவக்கினார் Sakharov. இதனால், சோவியத் அரசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்பட்டார் இவர். 1973 மற்றும் 74ம் ஆண்டுகளில் சில சோவியத் பத்திரிகைகள் இவரை தேசத்துரோகியாக சித்திரிக்கவும் செய்தன. அனைத்து அரசியல் நிலைப்பாடுகளுக்கும் மனித உரிமை விதிகள் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பது Sakharovன் கோட்பாடு.

ஆப்கானிஸ்தானில் சோவியத் இரஷ்யா 1979ல் நுழைந்து தலையிட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் Sakharov, 1980ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி கைதுச் செய்யப்பட்டு, Gorky நகரில் பிறர் தொடர்பின்றி காவல்துறை கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டார். 1986ம் ஆண்டுவரை இந்த தீவிர கண்காணிப்பும், பிறர் தொடர்பற்ற நிலையும் நீடித்தது. 1984ம் ஆண்டில் இவர் மனைவி Jelena ஐந்தாண்டு தண்டனைப் பெற்றார். 1986ல் Sakharovம் அவர் மனைவியும், மாஸ்கோ திரும்புவதற்கு அதிபர் Mikhail Gorbachev அவர்களால் அனுமதிக்கப்பட்டனர். 1989ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி மாரடைப்பால் காலமானார் Sakharov.

மனித உரிமைகளுக்காக உழைத்தவர்களுக்கென விருது ஒன்றை Sakharovவின் பெயரில் நிறுவி ஒவ்வோர் ஆண்டும் வழங்கி வருகிறது, ஐரோப்பிய பாராளுமன்றம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.