2015-03-09 15:53:00

பாதுகாப்பான சுற்றுச்சூழலும் மனித உரிமைகளும் தொடர்புடையவை


மார்ச்,09,2015. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நீதியோடும், மதித்தலோடும், சரிநிகர் தன்மைகளோடும் தொடர்புடைய ஒன்று என ஐ.நா. அவைக் கூட்டத்தில் எடுத்துரைத்தார், திருப்பீட அதிகாரி, பேராயர் சில்வானோ தொமாசி.

மனித உரிமைகள் அவையின் 28வது கூட்டத்தில் ஜெனீவாவில் உரையாற்றிய திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், பேராயர் தொமாசி அவர்கள், சுத்தமான, நலமான, பாதுகாப்பான சுற்றுச்சூழலைக் கொண்டிருப்பதில் தொடர்புடைய மனித உரிமைகள் குறித்து எடுத்துரைத்தார்.

சுற்றுச்சூழலை அழிப்பது, நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனித உரிமைகளை பாதிக்கவல்லது என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி அவர்கள், இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் சமநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றார்.

இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் இயற்றப்படும்போது, அவை, மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக இருக்கவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார், திருப்பீடப் பிரதிநிதி பேராயர் தொமாசி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.