2015-03-07 16:13:00

15 நாடுகள் நதிகளின் வெள்ளப்பெருக்கால் அதிகம் பாதிக்கப்படும்


மார்ச்,07,2015. இந்தியா, பங்களாதேஷ், சீனா ஆகிய நாடுகள், நதிகளின் வெள்ளப்பெருக்கால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றன என்று அமெரிக்க ஐக்கிய நாட்டை மையமாகக் கொண்ட உலக வளங்கள் நிறுவனமும், நான்கு டச்சு ஆய்வுக் குழுக்களும் நடத்திய ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது.

உலகில் ஓராண்டில் நதிகளின் வெள்ளப்பெருக்கால் ஏறக்குறைய 2 கோடியே 10 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், வெப்பநிலை மாற்றம் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியால், இம்மக்களின் எண்ணிக்கை 2030ம் ஆண்டுக்குள் 5 கோடியே 40 இலட்சமாக உயரும் என்றும் இந்த ஆய்வு கூறியுள்ளது.

உலகில் நதிகளின் வெள்ளப்பெருக்கால் அதிகம் பாதிக்கப்படும் மக்களில் ஏறக்குறைய எண்பது விழுக்காட்டினர், இந்தியா, பங்களாதேஷ், சீனா, வியட்நாம், பாகிஸ்தான் உட்பட 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் ஏறக்குறைய 50 இலட்சம் பேர் இத்தகைய ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என்றும் அந்த ஆய்வு மேலும் கூறியுள்ளது.

உலக அளவில் நதிகளின் வெள்ளப்பெருக்கால் ஆண்டுதோறும் 9,600 கோடி டாலர் பெறுமான வீட்டு உற்பத்திப் பொருள்கள் சேதமடைகின்றன, இதில் இந்தியாவில்    மட்டும் 1,400 கோடி டாலர், பங்களாதேசில் 540 கோடி டாலர் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த அளவு 2030ம் ஆண்டில் 52,100 கோடி டாலராக உயரும் என்றும் அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

ஆதாரம் : Reuter / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.