2015-03-06 14:40:00

திருத்தந்தை பிரான்சிஸ், அஜெர்பைஜான் அரசுத்தலைவர் சந்திப்பு


மார்ச்,06,2015. அஜெர்பைஜான் நாட்டு அரசுத்தலைவர் Ilham Aliyev அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும் இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்தார்.

தற்போதைய உலகின் விழுமியங்கள், பல்வேறு கலாச்சாரங்கள் மத்தியில் உரையாடல், அமைதிக்கு ஆதரவான பல்சமய உரையாடல், தற்போதைய அஜெர்பைஜான் பகுதி மற்றும் அனைத்துலகின் நிலவரம், பேச்சுவார்த்தை மூலம் போர்களுக்குத் தீர்வுகாணப்பட வேண்டியதன் அவசியம் போன்ற பல்வேறு தலைப்புகள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்தது.

மக்கள் மத்தியிலும், பல்வேறு மதங்கள் மத்தியிலும் இணக்கவாழ்வை ஊக்குவிப்பதற்கு கல்வி மிகவும் முக்கியம் என்பதும் வலியுறுத்தப்பட்டதாக திருப்பீட செய்தித் தொடர்பகம் மேலும் கூறியது.

அஜெர்பைஜான், கிழக்கு ஐரோப்பாவுக்கும் மேற்கு ஆசியாவுக்கும் இடையே, Caucasus மலைப் பகுதியில் அமைந்துள்ள நாடாகும். இது, சமயச் சார்பற்ற மற்றும் மக்களாட்சி அமைப்புமுறையைக் கொண்டுள்ள முஸ்லிம் நாடாகும். திரையரங்குளையும், நவீன பல்கலைக்கழகங்களையும் கொண்டிருக்கும் முதல் முஸ்லிம் நாடாகும் இது. எண்ணெய் வளம், இயற்கை வாயுக்கள் மற்றும் வேளாண் உற்பத்தி மூலம் இந்நாடு அதிகமான வருவாயைப் பெறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.