2015-03-06 14:48:00

கர்தினால் Egan மறைவு, திருத்தந்தை இரங்கல் செய்தி


மார்ச்,06,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கர்தினால் Edward Michael Egan அவர்கள் இறந்ததை முன்னிட்டு தனது இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நியுயார்க் பேராயர் கர்தினால் திமோத்தி டோலன் அவர்களுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Egan அவர்கள், தலத்திருஅவைக்கும், அகிலத் திருஅவைக்கும் ஆற்றியுள்ள பணிகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

அதோடு, கர்தினால் Egan அவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாறத் தான் செபிப்பதாகவும், அவரின் பிரிவால் வருந்தும் அனைவருடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இவ்வியாழனன்று நியுயார்க்கில் இறைவனடி எய்திய 82 வயது நிரம்பிய கர்தினால் Egan அவர்கள், 2000மாம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை நியுயார்க் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியவர்.

1957ம் ஆண்டில் குருவான இவர், தனது சொந்த சிகாகோ உயர்மறைமாவட்டத்தில் முதலில் பணியாற்றிய பின்னர், நியுயார்க் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றினார்.

கர்தினால் Egan அவர்களின் இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 226 ஆகவும், இவர்களில் எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 125ஆகவும் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.