2015-03-06 14:57:00

இவ்வுலகம் போர்க்கால மனநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றது


மார்ச்,06,2015. உலகப் போருக்கு முன்னும் பின்னும் ஜப்பான் நாடு ஆற்றியிருக்கும்  நடவடிக்கைகளால், உலகில் அமைதியைக் கொண்டுவருவதற்குத் தாங்கள் சிறப்பு அழைப்பைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளனர் ஜப்பான் கத்தோலிக்க ஆயர்கள்.

ஆயினும் தற்போதைய பொருளாதார உலகமயமாக்கல், அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை, பயங்கரவாதம் போன்றவற்றால் இந்த உலகம், போர்க்கால மனநிலைக்குத் திரும்பிக்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது என்று மேலும் கூறியுள்ளனர் ஆயர்கள்.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் எழுபதாம் ஆண்டை நினைவுகூரும் விதமாக, செய்தி வெளியிட்டுள்ள ஜப்பான் ஆயர்கள், தொழில் மற்றும் நிதி அமைப்பின் தாராளமயமாக்கல் இவ்வுலகை ஆதிக்கம் செலுத்தி வருகின்றது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றையும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வுலகில் சமத்துவமின்மை தொடர்ந்து விரிந்துகொண்டே செல்கின்றது, ஏழைகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளனர் ஆயர்கள்.

1945ம் ஆண்டுவரை கொரியத் தீபகற்பத்தின்மீது ஜப்பான் நாடு கொண்டிருந்த காலனி ஆதிக்கம், சீனா மற்றும்பிற ஆசிய நாடுகளுக்கு எதிராக ஜப்பான் நாட்டின் கடும் நடவடிக்கைகள் ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் துன்பங்களையும், தியாகங்களையும் ஏற்படுத்தின என்றும் ஆயர்களின் செய்தி கூறுகிறது.

“போருக்குப் பின்னர் எழுபதாம் ஆண்டுகள் : அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்” என்ற தலைப்பில் இச்செய்தியை வெளியிட்டுள்ளனர் ஜப்பான் ஆயர்கள்.   

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.