2015-03-04 14:44:00

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை


மார்ச் 04,2015. மார்ச் மாதமும் இத்தாலிக்கு குளிர்காலமே எனினும், இந்த ஆண்டு மார்ச் மாதம் குளிரின் கடுமைக்குறைவுடனேயே பிறந்தது. இப்புதனும் குளிரின்றி மிதமான வெப்பத்துடன் இருக்க, திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை தூய பேதுரு வளாகத்திலேயே இடம்பெற்றது. குடும்பம் குறித்து, தன் மறைக்கல்வி போதனைகளில் தொடர்ந்து கருத்துக்களைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், குடும்பத்தில் முதியோரின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

நம் இன்றைய நவீன காலத்தில் முதியோரின் ஆயுள் காலம் நீண்டுகொண்டே செல்கின்றது. இருப்பினும் நம் சமூகங்கள், முதியோருக்குரிய இடத்தை வழங்க மறுப்பதுடன், அவர்களை ஒரு சுமையாகவே கருதுகின்றன. ஒரு சமூகம் தன் மூத்த குடிமக்களை எவ்வாறு நடத்துகின்றதோ அதை வைத்து அந்த சமூகத்தின் தரத்தை நாம் கணிக்கமுடியும். இந்த நிலை, குறிப்பாக, மேற்கத்தியக் கலாச்சாரத்தில் ஒரு பெரும் சவாலாக உள்ளது. ஒரு பக்கத்தில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பையும், மறுபக்கத்தில் இளையோரின் புதிய கலாச்சாரம், இலாப நோக்கு, பயன் தராதது என எண்ணும் அனைத்தையும் வீசியெறிய முனையும் மனநிலை ஆகியவைகளையும் காண்கிறோம். எளிதில் பாதிப்படையக்கூடிய நிலையிலும், சிறப்பு அக்கறை தேவைப்படுபவர்களாகவும் இருக்கும் நம் முதியோர், அதிலும் குறிப்பாக தனிமையில் இருப்போர் மற்றும் நோயிற்றிருப்போர், நம் சிறப்பு அக்கறைக்கும் கவனிப்புக்கும் அழைப்பு விடுக்கின்றனர். அவர்கள் ஒரு சுமையல்ல, மாறாக, விவிலியம் எடுத்துரைப்பதுபோல்(சீராக் 8:9), அவர்கள் ஞானத்தின் சேமிப்புக் கிடங்குகள். எப்போதும் நன்றியுணர்வுடனும் பாசத்துடனும் முதியோருடன் நடைபோடும் திருஅவை, அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாகவும், சமூகத்தின் முழுமையான ஓர் அங்கமாகவும் உணர்வதற்கு உதவி வருகிறது. தலைமுறைகளுக்கிடையே இத்தகைய ஒருமைப்பாடு இல்லையெனில், சமூகத்தின் வாழ்வு ஒரு வளமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.  முதியோர் மீது அக்கறை காட்டுவதன் மூலம், சமூகத்தைப் பின்னிப் பிணைத்திருக்கும் இழைகளைப் பலப்படுத்துவதுடன், இளைய தலைமுறையின் நல்ல வருங்காலத்தையும் உறுதி செய்கிறோம்.

இவ்வாறு, நம் குடும்பங்களில் முதியோருக்கு வழங்கப்படவேண்டிய முக்கியத்துவம் குறித்து தன் கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் மறைப்போதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.