2015-03-04 15:38:00

திருத்தந்தையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்,காவல்துறை


மார்ச்,04,2015 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்ல தாக்கங்களை உருவாக்கிவரும் உலகத் தலைவர்களில் ஒருவராக விளங்குவதால், அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் எழுவது எதிர்பார்க்கக்கூடியதுதான் என்று வத்திக்கான் காவல் பணி அதிகாரி ஒருவர் கூறினார்.

இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களிடமிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆபத்து வரக்கூடும் என்று செய்திகள் வெளிவருவது குறித்து, "Policia Moderna" என்ற இதழுக்கு வத்திக்கான் காவல் துறையான Gendermerieவின் தலைவர், Domenico Giani அவர்கள் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த மூன்று திருத்தந்தையரின் பணிக்காலத்தில் காவல்துறையில் பணியாற்றிவரும் Giani அவர்கள், இஸ்லாமியக் குழுக்களிடமிருந்து எச்சரிக்கைகள் வந்தவண்ணம் இருந்தாலும், பல இஸ்லாமிய நாடுகள் திருத்தந்தையரின் பணிகளுக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பதையும் தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஊடகங்களில் எச்சரிக்கைகள் வெளிவந்தாலும், எந்த ஒரு குழுவிடமிருந்து வத்திக்கானுக்கு நேரடித் தாக்குதல்கள் எழுவதாகத் தெரியவில்லை என்று Giani அவர்கள் குறிப்பிட்டார்.

அண்மைய எச்சரிக்கைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உணர்ந்திருந்தாலும், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தையோ, மக்களுடன் மேற்கொள்ளும் சந்திப்புக்களையோ மாற்றப்போவதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறார் என்றும் காவல்துறை அதிகாரி Giani அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் :  Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.