2015-03-03 15:12:00

அரசும், புரட்சிப்படையினரும் உரையாடலைத் தொடங்குமாறு அழைப்பு


மார்ச்,03,2015. மியான்மார் இராணுவத் தலைவர்களும், பல்வேறு இனங்களின் புரட்சிப்படைத் தலைவர்களும் ஆயுதம் ஏந்திய தாக்குதல்களை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டின் முதல் கர்தினால்.

மியான்மாரின் தெற்கே, Bago மாநிலத்தில் அமைந்துள்ள Nyaunglebin அன்னைமரியா திருத்தலத்துக்கு, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் என, ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுடன் ஆண்டுத் திருப்பயணத்தை மேற்கொண்ட யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் போ அவர்கள், நாட்டில் ஒற்றுமையும் ஒப்புரவும் ஏற்படுமாறு தான் விடுத்துவரும் அழைப்பை மீண்டும் முன்வைத்தார்.

மியான்மார் இராணுவம், அந்நாட்டின் ஆயுதக் குழுக்களோடு, குறிப்பாக, ஷான் மாநிலத்தில் கச்சின் விடுதலைப் படையினர் மற்றும் கோகாங் புரட்சிப் படையினரோடு அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் கர்தினால் போ.

மியான்மார் வரலாற்றில் முதன்முறையாக கர்தினாலாக உயர்த்தப்பட்டுள்ள இவரும், மற்ற அருள்பணியாளர்களும், இத்திருப்பயணத்தில் அமைதிப் புறாக்களையும் பறக்கவிட்டனர்.

மியான்மாரில் 135க்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் உள்ளன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.