2015-03-03 15:16:00

HIVயின் இரு பிரிவுகள் கேமரூன் கொரில்லாக்களிடமிருந்து பரவல்


மார்ச்,03,2015. எய்ட்ஸ் நோயை விளைவிக்கும் HIV நோய்க் கிருமியின் நான்குவகைகளில் இரண்டு வகை, ஆப்ரிக்காவின் மேற்கில் தாழ்வான பகுதிகளில் வாழும் கொரில்லாக்களிடமிருந்து பரவியிருப்பதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இரண்டு வகைகளும், கேமரூன் நாட்டுக் கெரில்லாக்களிடமிருந்து பரவியிருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

அந்த நோய்க் கிருமியின் மற்ற இரண்டு வகைகளும் கேமரூன் நாட்டை சேர்ந்த சிம்பன்சிகளிடமிருந்து வந்திருப்பதாக ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.

கேமரூன், காபோன், காங்கோ சனநாயக குடியரசு, உகாண்டா ஆகிய ஆப்ரிக்க நாடுகளில் வாழும் கொரில்லாக்களிடம் ஆய்வுகளை நடத்திய பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள், தற்போதைய கண்டுபிடிப்பால், எய்ட்ஸ் நோயை விளைவிக்கும் நோய்க் கிருமியின் அனைத்து உட்பிரிவுகளுமே எங்கிருந்து வந்தன என்பது தெரிவியவந்துள்ளது எனத் தெரிவித்தனர்.

மனிதர்களிடையே உயிர்க்கொல்லி நோய்களைப் பரப்பும் திறனுள்ள HIV நோய்க் கிருமிகளின் புகலிடமாக இந்தக் குரங்கினங்கள் இருப்பதாக இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக, ஆய்வை மேற்கொண்ட பிரான்சின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை சேர்ந்த Martine Peeters அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று உலகில் 3 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் HIV நோய்க் கிருமிகளுடன் வாழ்கின்றனர். இவர்களில் 32 இலட்சம் பேர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். தினமும் 2,700க்கு அதிகமானவர்கள், அதாவது ஒவ்வொரு மணிக்கும் ஏறக்குறைய 240 பேர் வீதம் HIV நோய்க் கிருமிகளால் தாக்கப்படுகின்றனர்.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.