2015-03-02 15:09:00

வாரம் ஓர் அலசல் – அன்பு அனைத்தையும் வெற்றிகொள்ளும்


மார்ச்02,2015. "அன்பு அனைத்தையும் வெற்றிகொள்ளும்; நாமும் அன்புக்கு அடிபணிவோம்". கி.பி. 19ம் ஆண்டில் மறைந்த உரோமைக் கவிஞர் Virgil அவர்கள் (`Aeneid' 70-19 BC) எழுதிய, காலத்தால் அழியாத இந்த வரிகளை, கேட்டவுடன், இதை என் வாழ்விலே உணர்ந்திருக்கிறேன், பிறர் வாழ்விலும் அன்பு வெற்றி பெறுவதைப் பார்த்திருக்கிறேன் என்று, நேயர்களே உங்களில் பலர் நினைப்பதை உணர முடிகின்றது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது, "நாமும் அன்பினால் உருமாற்றம் அடையலாம். அன்பு ஒவ்வொன்றையும் உருமாற்றுகிறது, இதை நீங்கள் நம்புகின்றீர்களா? என்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நின்றுகொண்டு திருத்தந்தையின் இந்த உரையைக் கேட்டுக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் கேட்டார். அங்கிருந்த எல்லாருமே அக்கூற்றை ஏற்பதுபோல் தெரியாததால், Ah…. நிறைய பேரிடமிருந்து பதில் வரவில்லையே என திருத்தந்தை சொல்ல, பின்னர் அங்கு இருந்த அனைவரும் “ஆமாம்” என்று சப்தமாகச் சொன்னார்கள். எம் அன்பு நேயர்களே, அன்பு ஒவ்வொன்றையும் உருமாற்றும். அன்பு அனைத்தையும் வெற்றிகொள்ளும், தூய பவுலடிகளார் எழுதியிருப்பது போன்று, அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அன்பு அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்(1கொரி.13:7). ஆம். அன்பு அனைத்தையும் வெற்றிகொள்ளும்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு கலிஃபோர்னியாவில் ஒரு வயதான தம்பதியர் கைகோர்த்தபடியே இறந்தனர் என்று கடந்த வியாழக்கிழமை (பிப்.26,2015) ஒரு செய்தி வெளியானது. 90 வயது Floyd Hartwig அவர்களும், அவரது மனைவியான 89 வயது Violet அவர்களும் 67 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடத்தியவர்கள். இவர்கள் பற்றி இவர்களது மகள் Donna Scharton கூறுகிறார்..

"எனது பெற்றோருக்கு 1947ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்கள் ஒருவர் ஒருவர் மீது மிகவும் அன்புசெலுத்தினார்கள், கடின உழைப்பாளிகள். உலகப் பொருள்களில் அதிகம் பற்று வைக்காதவர்கள். தங்களின் வாழ்வு முழுவதும் அருகருகே இருந்து வேலை செய்தவர்கள். அண்மை ஆண்டுகளாக இருவரும் நோய்வாய்ப்பட்டனர். எனது தந்தைக்குப் புற்றுநோய். தாய்க்கு மறதி நோய். இருவரும் இறுதி நேரத்தை நெருங்குகின்றனர் என்று அறிந்த எங்கள் குடும்பத்தினர், எங்கள் பெற்றோரின் படுக்கைகளை நெருக்கமாக வைத்தோம். தந்தை Floyd, தாய் Violetன் கரங்களைப் பிடித்தபடியே முதலில் இறந்தார். ஐந்து மணி நேரம் சென்று தாயும் இறந்தார். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த மதிப்புடனும், ஒருவர் ஒருவர் மீது மிகுந்த அக்கறையுடனும் வாழ்ந்தவர்கள்"... என்று இத்தம்பதியரின் மகள் Reuters ஊடகத்திடம் கூறியிருந்தார். வாழ்வில் பல ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதியர் இறப்பிலும் இணைபிரியாமல் இருப்பதை நாம் அவ்வப்போது ஊடகங்களில் வாசித்து வருகிறோம். Brooklyn நகரில் Emilie Gossiaux என்ற 21 வயது கல்லூரி மாணவி, இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, 18 சக்கரங்கள் கொண்ட பெரிய வாகனத்தால் இடிக்கப்பட்டு Bellevue மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலை, இடதுகால், இடுப்பெலும்பு ஆகியவை பலமாகப் பாதிப்பு. அறுவைச் சிகிச்சையின்போது அவரது இதயம் ஒரு நிமிடம் நின்றுவிட்டது. உறுப்புக்களைத் தானம் செய்யச் சொல்லி தாதியர் அம்மாணவியின் பெற்றோரிடம் கூறிவிட்டனர். ஆனால் அவரின் நண்பர் Alan Lundgard என்பவர், இரவும் பகலும் எமிலியின் அருகில் அமர்ந்து, தான் அவர்மீது வைத்திருக்கும் அன்பைச் சொல்லிக்கொண்டே இருந்தார். நான் உன்னை அன்பு செய்கிறேன் என, எமிலியின் கையில் எழுதி வைத்தார். இன்று எமிலி தனது கல்லூரிப் படிப்பைத் தொடர்கிறார்.

சீனாவில் தாய் ஒருவர், பிறந்தவுடன் இறந்துவிட்டதாக கூறப்பட்ட தனது குழந்தையை அணைத்து முத்தமிட்டுக் கொண்டே இருந்து, அக்குழந்தைக்கு மீண்டும் வாழ்வு கொடுத்தார். இதைப் பார்த்து மருத்துவர்களே வியந்தனர். இப்படியெல்லாம் கேட்கும்போது அன்பின் வலிமையை நம்மால் உணர முடிகிறது. உண்மையான அன்புக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது. தமிழகத்தில் நடக்கும் மேடை நிகழ்ச்சி ஒன்றை கடந்த வாரத்தில் Youtubeல் பார்த்தபோது ஓர் அண்ணன் தனது தங்கைகள் மற்றும் பெற்றோர்மீது வைத்திருக்கும் பாசத்தை உணர முடிந்தது. அந்தச் சிறுமி மேடையில் ஒலிவாங்கியைப் பிடித்து தனது அண்ணனின் தியாகத்தைச் சொன்ன போது பலர் கண்ணீர் சிந்தினர். மூட்டைத் தூக்கி தனது குடும்பத்தைக் காப்பாற்றி, மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்துக்கொண்டிருந்த தந்தையின் கஷ்டம் நீங்க, அந்த இளைஞனும் படிப்பை நிறுத்திவிட்டு ஒரு நாளைக்குப் பல மணி நேரம் வேலை செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். ஆம். அன்பு அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்(1கொரி.13:7). அன்பு அனைத்தையும் வெற்றிகொள்ளும். அதனால் நாமும் அன்புக்கு அடிபணிவோம்.

அன்பு, ஒரு தெய்வ சக்தியாகும். அது நித்தியமானது. அது, மனிதரிடம் மட்டுமன்றி, மற்ற எல்லா உயிர்களிடத்திலும் தன்னை வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது. பாகிஸ்தானில் நடந்த நிகழ்வு இது. ஒரு தாய்க் குரங்கு இறந்து விட்டது. அப்போது அதன் குட்டிக் குரங்கு ஒன்று, அதன்மேல் விழுந்து புரண்டு புரண்டு அழுதது. அக்குரங்கைப் புதைகுழியில் வைத்து மண்ணைப் மூடவும் குட்டிக் குரங்கு அனுமதிக்கவில்லை. குழியின் உள்ளே குட்டிக்குரங்கும் விழுந்துவிட்டது.

அந்த ஊரில் பல வீடுகளுக்கு சிறிய குளங்கள் உண்டு. அதில் வாழ்ந்த மீன்கள் சில கரையில் ஒதுங்கி இறந்துவிட்டன. அந்தக் குளத்து மீன்களோடு நட்புடன் பழகிவந்த அந்த வீட்டு நாய், கரை ஒதுங்கிய மீன்களுக்கு வாழ்வு கொடுப்பதற்கு தண்ணீரை மீன்களின் வாயில் தள்ளிக்கொண்டிருந்தது. இதையெல்லாம் இணைய பக்கங்களில் பார்க்கும்போது, அன்பு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது என்ற உண்மை உறுதிப்படுகிறது. உயிரற்ற பொருள்களிடத்தில்கூட நாம் அன்பாய் இருக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். ஒரு மேஜையை, ஒரு நாற்காலியை நகர்த்தும்போது, கதவுகளைத் திறந்து மூடும்போது, காலணிகளைக் கழற்றி வைக்கும்போது .. இப்படி ஒவ்வொன்றையும் செய்யும்போது மென்மையாக நடந்துகொள்ள வேண்டுமென்று சொல்கிறார்கள். நாள் முழுவதும் காலணி அணிந்து கொள்ளும் குளிர் நாட்டில் வாழ்ந்து வரும் ஒருவர், கடந்த ஆண்டில் கால்வலியால் அதிகமாகத் துன்புற்றார். வீட்டில் வந்து காலணியைக் கழற்றும்போது அதிகமாக கால் வலிக்குது என்பார். இந்தச் சூவை தூக்கிப் போட வேண்டியதுதான் என்பார். ஆனால் இந்த ஆண்டும் அதே சூவையே பயன்படுத்துகிறார். என்ன, தூக்கி வீசவில்லையா என்று கேட்டதற்கு, எனக்கு ஒரு புதுமை நடந்திருப்பதாக உணர்கிறேன். நான் இப்பொழுது சூவைக் கழற்றும்போது எரிச்சல்படாமல் ஒருவித அன்புணர்வோடும், நன்றியுணர்வோடும் கழற்றி வைக்கிறேன். அதனால் கால்களில் வலி இல்லை என்று சொன்னார்கள். இதைக் கேட்டபோது, அன்பு அனைத்தையும் வெற்றி கொள்கின்றது என்று இதழ்கள் முணுமுணுத்தன.

தாதியர் ஒருவர் இணையத்தில் பிரசுரித்துள்ள ஒரு கடிதம் இப்படிச் சொல்கிறது...

அன்று ப‌ர‌ப‌ர‌ப்பான‌ காலை நேரத்தில், 8.30 ம‌ணிக்கு, எண்ப‌து வ‌ய‌து ம‌திக்க‌த்த‌க்க‌  பெரிய‌வ‌ர் ஒருவ‌ர் த‌ன் க‌ட்டைவிர‌லில் இருக்கும் தைய‌ல்க‌ளைப் பிரிக்க‌ மருத்துவமனைக்கு வந்திருந்தார். தான் அவ‌ச‌ர‌த்தில் உள்ள‌தாக‌வும், 9.00 ம‌ணிக்கு ஒரு முக்கிய‌ ப‌ணி இருப்ப‌தாக‌வும் தெரிவித்தார். அவ‌ர‌து அவ‌ச‌ர‌த்தை உண‌ர்ந்து வரிசையில்  அம‌ர்த்தினேன். அவ‌ர் த‌ன் கைக்க‌டிகார‌த்தை அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தார். நான் அவ‌ரிட‌ம் சென்று அவ‌ரின் காய‌த்தைப் பார்த்தேன். அது ஆறியிருந்த‌து. ம‌ருத்துவ‌ர் ஒருவ‌ரிட‌ம் கலந்தாலோசித்து, அப்பெரியவரின் தைய‌ல்க‌ளைப் பிரித்துவிட்டு மீண்டும் சாதார‌ண‌ க‌ட்டுக‌ளைப் போட‌ ஆர‌ம்பித்தேன். இப்ப‌டிக் கட்டுகளைப் போட்டுக் கொண்டே அவ‌ரிட‌ம் பேச்சுக் கொடுத்தேன். “என்ன‌.. காலையில் இவ்வளவு அவ‌ச‌ர‌ம், முக்கிய‌ ந‌ப‌ர் யாரையும் ச‌ந்திக்க‌னுமா” என்றேன். இல்லை, நான் வேறு ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்று எனது ம‌னைவியுட‌ன் காலை உண‌வு உண்ணவேண்டும் என்றார் அவர். மேலும் அவரிடம் கேட்டேன். அவரது ம‌னைவிக்கு தீவிர நோய் தாக்கி க‌ட‌ந்த ஐந்து ஆண்டுகளாக மருத்துவமனையில் இருப்ப‌தும் தெரிய‌வ‌ந்த‌து. பேசிய‌ப‌டியே க‌ட்டுப்போட்டு முடித்தேன். “தாம‌த‌மாகிவிட்ட‌தா? ம‌னைவி கோபித்துக் கொள்வார்க‌ளா” என‌ கேட்டேன். சிரித்துக்கொண்டே..”அவ‌ள் கோபித்துக்கொள்ள‌ மாட்டாள். அவ‌ளுக்கு என்னை யார் என்றே தெரியாது. எல்லாம் ம‌ற‌ந்து விட்ட‌து. என்னை அவ‌ளுக்கு அடையாள‌ம் தெரியாமல்போய் ஐந்து ஆண்டுகள் ஆகின்ற‌ன” என்றார் பெரியவர். ”உங்க‌ளை யார் என்றே தெரியாத‌வ‌ரிட‌ம் தின‌மும் காலை உண‌வு உண்டு, நாள் முழுவதும் மனைவியோடு இருக்கின்றீர்க‌ளா?” என‌ வின‌வினேன். “அவ‌ளுக்கு தெரிய‌வில்லை என்றால் என்ன‌? என‌க்கு அவ‌ளைத் தெரியுமே..” என்றார். அவ‌ர் போன‌ பின்ன‌ர் உட‌ல் முழுக்க‌ ஏதோ செய்வ‌து போல‌ ஓர் உண‌ர்வு. உண்மையான‌ அன்பை த‌ரிசித்த‌ ஆன‌ந்த‌ம்.

உண்மையான அன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை. அது இருப்ப‌தையும் இல்லாத‌தையும் என, அனைத்தையும் ஏற்றுக்கொள்வ‌து.

வாழ நினைப்பவருக்கு வானம்கூட வானம்பாடிதான் என்பார்கள். அன்பு, எப்போதும் மறக்காமல் இருப்பது அல்ல, அன்பு என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது.  அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவவிட வேண்டாம். ஒருவருடைய தோளில் நீங்கள் கைவைத்தால், உங்களது இதயத்தின் அன்பு முழுவதையும் உங்கள் கையின் மூலம் அவருக்கு அனுப்புங்கள். உங்களது முழு உயிரையும் முழு இதயத்தையும் அந்தக் கையில் இணையச் செய்து போகவிடுங்கள். அந்தக் கை மாயமாக வேலை செய்வதைக் கண்டு வியப்பீர்கள். சரியான முறையில் அன்பு செலுத்தும் மனிதர் ஒருவர் பிறந்தால் இலட்சக்கணக்கான மனிதர்களின் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்கத் துவங்கிவிடும்! என்கிறார்கள். இன்புடன் வாழ என்றும் அன்புடன் இருப்போம். அப்போது அன்பு அனைத்தையும் வெற்றிகொள்ளும் என்பதை அனுபவிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.