2015-03-02 15:56:00

நம்மை நாமே தீர்ப்பிட கற்றுக்கொள்வதே கிறிஸ்தவத்தின் முதல்படி


மார்ச்,02,2015. மற்றவர்களைத் தீர்ப்பிடுவது நமக்கு எளிதாக உள்ளது, ஆனால் நம்மையே நாம் முதலில் தீர்ப்பிடக் கற்றுக்கொள்ளும்போதுதான், கிறிஸ்தவ பயணத்தில் முன்னேற்றம் காணமுடியும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் பாவிகள் என்பதை மனதில்கொண்டு நம்மையே நாம் சரியான முறையில் தீர்ப்பிட கற்றுக்கொள்வதே கிறிஸ்தவத்தின் முதல்படி என்றார்.

நம்மை நாமே நியாயப்படுத்துவதில் நாம் தலைசிறந்து விளங்குகின்றோம், ‘அது நானில்லை’, ‘அது என் தவறில்லை’, ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்றெல்லாம் தவறுகளிலிருந்து தப்பிக்கப் பார்ப்பது கிறிஸ்தவ வாழ்வல்ல என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்களை குற்றஞ்சாட்டுவது எளிது, ஆனால் அங்கு வித்தியாசமாகச் செயல்பட்டு, நம் தவறுகளை ஏற்கும்போது முதலில் கவலை வந்தாலும், இறுதியில் அது அமைதியையும் நலத்தையுமே நமக்கு வழங்குகின்றது என்றார்.

நம் பாவங்கள் குறித்து வெட்கப்படுதல், இறை இரக்கம் குறித்து பெருமைப்படல் போன்றவை குறித்தும் தன் மறையுரையில் விரிவாக எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.