2015-03-02 16:08:00

திருத்தந்தையின் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை


மார்ச்,02,2015 தன் சீடர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும், சிலுவையின் பாதையில் நடப்பதற்கு ஊக்கமளிக்கவும் தன் உருமாற்றம் நிகழ்வை ஒரு கருவியாக இயேசு பயன்படுத்தினார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு திருப்பலியின் நற்செய்தியில் தரப்பட்டுள்ள 'இயேசுவின் உருமாற்றம்' நிகழ்ச்சி குறித்து நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோமையர்களின் ஆட்சியிலிருந்து தங்கள் நாட்டை விடுவிப்பதற்கு மெசியா வருவார் என்று மக்கள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை இயேசு விரும்பவில்லை என்று கூறினார்.

தன்னுடைய மகிமை நிறை பாடுகள் குறித்து எடுத்துரைத்தவற்றை சீடர்களாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை உணரத்தான் இயேசு, தன் உயிர்ப்புக்குப் பின் வெளிப்படப்போகும் மகிமையின் முன்னோட்டத்தை தன் மூன்று முக்கியச் சீடர்களுக்கு உருமாற்றத்தின் வழி காண்பித்தார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இயேசுவின் உருமாற்றத்தின்போது மோசேயும், எலியாவும் தோன்றியது, சட்டம் மற்றும் இறைவாக்கினர்களின் அடையாளமாகவும், அனைத்தும் இயேசுவில் தோன்றி, அவரிலேயே முடிவடைகின்றன என்பதை சுட்டிக்காட்டுபவைகளாக உள்ளன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

நாமும் நம் வாழ்வை இழந்து மற்றவர்களின் மீட்புக்குக் காரணமாக இருக்கும்போது, மகிமையடைவோம்; ஏனெனில், சிலுவைகளும், துன்பங்களும் இறுதியில் மகிழ்ச்சியை நோக்கியே இட்டுச் செல்கின்றன என்று தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.