2015-03-02 16:16:00

கச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் 4000 இந்தியர்கள்


மார்ச்,02,2015 இந்தியா, மற்றும் இலங்கை கடல்படை பாதுகாப்பு உதவியுடன், கச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழா, சிறப்புடன் நடந்தேறியுள்ளது.

இராமேஸ்வரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில், பாக் வளைகுடா கடலில் அமைந்துள்ள கச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் இந்தியாவிலிருந்து 110 படகுகளில் சென்ற 4003 பேரும், இலங்கையிலிருந்து 3000த்திற்கும் மேற்பட்டோரும் இச்சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இடம்பெறும் கச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு, இரு நாடுகளிலுமிருந்து வந்திருந்த பக்தர்களுடன், சிலுவைப்பாதை, ஞாயிறு காலை திருப்பலி மற்றும் தேர்பவனி இடம்பெற்றன.

1974ம் ஆண்டு, கச்சத் தீவு, இலங்கைக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விழா நடத்துவதில் ஏற்பட்டச் சிக்கல்கள், 2010ம் ஆண்டிற்குப்பின், ஓரளவு சுமுகமாகியுள்ளதைத் தொடர்ந்து, திருவிழாக் கொண்டாட்டங்கள் இருநாட்டு மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்று வருகிறது.

1913ம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோர், கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயத்தை ஓலைக் குடிசையாக எழுப்பினர்.

ஆதாரம் : Dinamalar / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.