2015-02-28 15:55:00

ஐ.எஸ். தீவிரவாதிகள் கலாச்சார அழிவை நடத்துகின்றனர், யுனெஸ்கோ


பிப்.28,2015. ஐ.எஸ்.ஐ.எல். இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகள் மொசூல் அருங்காட்சியகத்தை தாக்கும் காணொளியைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகச் சொல்லி, அவ்வன்செயல்களுக்கு எதிரான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் ஐ.நா.வின் யுனெஸ்கோ இயக்குனர் இரினா பொக்கோவா.

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாதிகள் கலாச்சார அழிவு நடவடிக்கைகளைச் செய்து வருவதாக, பத்திரிகையாளர் கூட்டத்தில் குற்றம் சாட்டியுள்ள யுனெஸ்கோ இயக்குனர் பொக்கோவா அவர்கள், பயங்கரவாதிகள் மக்களைக் கலங்கடிக்கும் தங்களின் யுக்திகளில் ஒன்றாக, கலாச்சாரப் பாரம்பரிய வளங்களை அழித்து வருகின்றனர் என்று கூறினார்.

ஐ.நா. பொதுச் செயலரும், பாதுகாப்பு அவையும் இதில் உடனடியாகத் தலையிட்டு கலாச்சார பாரம்பரிய வளங்கள் காக்கப்படுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார் பொக்கோவா.

மொசூல் அருங்காட்சியகத்தில் பழங்காலப் பொருட்களை அழிப்பதைக் காட்டுகின்ற காணொளியை ஐ.எஸ். இஸ்லாமிய அரசு வெளியிட்டுள்ளது. பெரிய சிலைகளை சுத்தியலால் இடித்து வீழ்த்தி உடைப்பதாக அதில் உள்ளது. கி.மு. 9-ம் நூற்றாண்டு அசீரிய காலத்தைச் சேர்ந்த, சிறகுகள் கொண்ட காளை மாட்டின் கலைச்சின்னமும் அழிக்கப்பட்ட பொருள்களில் உள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.