2015-02-27 14:50:00

திருத்தந்தையின் செபங்கள் சிரியா கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல்


பிப்.27,2015. சிரியாவில் இஸ்லாம் தீவிரவாதிகளின் பிடியில் 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சிக்கியிருக்கும் துன்பம் நிறைந்த சூழலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளும், செபங்களும் மிகுந்த ஆறுதலாக உள்ளன என்று சிரியா கிறிஸ்தவத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது தவக்கால ஆண்டுத் தியானத்தில் ஆழ்ந்திருந்தாலும் சிரியாவின் நிலைமைகளை மிகுந்த அக்கறையுடன் கவனித்து, சிரியாவுக்காகச் செபிப்பதோடு, தங்களையும் செபிக்குமாறு கேட்டதாகவும் கூறினர்  சிரியா கிறிஸ்தவத் தலைவர்கள்.

ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் பயங்கரவாதிகள், கடந்த சில நாள்களாக, சிரியாவின் வட கிழக்குப் பகுதியிலுள்ள அசீரிய கிறிஸ்தவக் கிராமங்களை இலக்கு வைத்து  நடத்திவரும் வன்முறையில் 350க்கும் மேற்பட்டவர்கள் அவர்களிடம் சிக்கியுள்ளனர்.   இக்கிறிஸ்தவர்களைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்ட அசீரிய இளைஞர்களில் ஏறக்குறைய 15 பேர் ஏற்கனவே கொலை செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

சிரியாவின் நிலைமை குறித்து வத்திக்கான் வானொலியில் பேசிய சிரியாவின் திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி அவர்கள், சிரியாவின் நெருக்கடி நிலைமையில் இதுவரை எந்த மாற்றமும் தெரியாததால், மக்கள் அனைத்துலக சமூகத்தால் கைவிடப்பட்டதாக உணர்கின்றனர் என்று தெரிவித்தார்.  

மேலும், அசீரியக் கிறிஸ்தவர்களில் ஐந்தாயிரத்துக்கு அதிகமானோர் துருக்கி எல்லைகளில் அடைக்கலம் தேடுகின்றனர் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அசீரியக் கிறிஸ்தவ சமூகம், மத்திய கிழக்கில் மிகவும் பழமையான கிறிஸ்தவ சமூகங்களில் ஒன்றாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.