2015-02-26 15:27:00

திருத்தந்தை ஆறாம் பால், இத்தாலிய மொழி திருப்பலி - 50ம் ஆண்டு


பிப்.26,2015 உலகின் அனைத்து பங்குக் கோவில்களிலும், இன்னும் வேறு பல கோவில்களிலும் மக்கள் பங்கேற்கும் திருப்பலியில், இன்று நாம் புதிய வழிபாட்டு வடிவத்தை துவக்குகிறோம் என்று முன்னாள் திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால் அவர்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சொன்னார்.

திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால் அவர்கள் உரோம் நகரில் அமைந்துள்ள அனைத்துப் புனிதர்கள் ஆலயத்தில் 1965ம் ஆண்டு, மார்ச் 7ம் தேதி முதன்முதலாக இத்தாலிய மொழியில் திருப்பலி ஆற்றுகையில் இவ்வாறு கூறினார்.

திருஅவை வரலாற்றில் நிகழ்ந்த இந்த முக்கிய மாற்றத்தின் பொன்விழாவைக் கொண்டாடும் வகையில், Via Appia Nuova வில் அமைந்துள்ள அதே ஆலயத்தில் வருகிற மார்ச் 7ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியாற்றச் செல்கிறார்.

இந்தப் பொன்விழாவையொட்டி, உரோம் மறைமாவட்டத்தின் திருவழிபாட்டு பணிக்குழு, "நன்றியில் இணைந்து" என்ற மையக்கருத்துடன் கருத்தரங்கு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

அகில உலக நற்கருணை மாநாடுகளுக்குப் பொறுப்பாளராகச் செயலாற்றும் பேராயர் பியெரோ மரினி அவர்கள், "வழிபடும் மக்களுக்கிடையே உரையாடலை வளர்க்கும் கருவி, பேசும் மொழி" என்ற தலைப்பில் ஓர் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.