பிப்.25,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட தலைமையக அதிகாரிகளும் அரிச்சா நகர் விண்ணகப் போதகர் தியான இல்லத்தில் ஆண்டு தியானம் செய்து வருகின்றனர். நாம் ஏற்கனவே அறிவித்தபடி, இப்புதன் பொது மறைக்கல்வி உரை உட்பட இந்த வாரத்தில் திருத்தந்தையின் எந்தப் பொது நிகழ்வுகளும் இடம்பெறாது. தற்போது கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்துவரும் தவக்காலத்துக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய செய்தியின் சுருக்கத்தை இப்போது தருகிறோம்.
உலகளாவியத் திருஅவைக்கும், ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகத்துக்கும், ஒவ்வொரு விசுவாசிக்கும் தவக்காலம், புதுப்பித்தலின் காலமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, இக்காலம் அருளின் காலம்(2 கொரி. 6:2). கடவுள்தாமே முதலில் நமக்குக் கொடுக்காத எதையும் அவர் நம்மிடமிருந்து கேட்பதில்லை. கடவுளே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம்(1யோவா.4:19). அவர் நம்மைவிட்டுத் தொலைவில் இல்லை. அவரது இதயத்தில் நாம் ஒவ்வொருவரும் ஓரிடத்தைக் கொண்டிருக்கிறோம். அவர் நம் பெயரை அறிந்திருக்கிறார். அவர் நம்மீது அக்கறை செலுத்துகிறார், நாம் அவரைவிட்டுப் பிரிந்து செல்லும்போதெல்லாம் நம்மை அவர் தேடுகிறார். நம் ஒவ்வொருவர்மீதும் ஆர்வமாய் இருக்கிறார். நமக்கு நிகழ்பவைகளைப் புறக்கணித்து இருப்பதற்கு அவரது அன்பு அனுமதிப்பதில்லை. நாம் நலமாகவும், வசதியாகவும் இருக்கும்போது பிறர் பற்றி மறக்கிறோம். நாம் பிறரின் பிரச்சனைகள், துன்பங்கள், பிறர் சந்திக்கும் அநீதிகள் குறித்து அக்கறையின்றி இருக்கிறோம். நம் இதயங்கள் உணர்ச்சியற்று வளர்கின்றன, பிறரைப் புறக்கணிக்கும் இத்தகைய தன்னலப் போக்குகள் உலகளாவிய போக்காகவும் உள்ளன. அவையே உலகமயமாக்கப்பட்டுள்ள புறக்கணிப்பு என்று நம்மைப் பேச வைக்கின்றன. கிறிஸ்தவர்களாகிய நாம் இத்தகையப் பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்க்க வேண்டும். கடவுள் அன்புக்கு மனம் மாறும்போது, வரலாறு தொடர்ந்து எழுப்பும் கேள்விகளுக்கு இறைமக்கள் பதில்களைக் கண்டுகொள்கின்றனர். இவ்வுலகம் எதிர்நோக்கும் முக்கிய சவால்களில் ஒன்றான உலகமயமாக்கப்பட்டுள்ள புறக்கணிப்பு பற்றி இத்தவக்காலச் செய்தியில் பேச விரும்புகிறேன். நமக்கு அடுத்திருப்பவரையும், இறைவனையும் புறக்கணித்து வாழ்வது கிறிஸ்தவர்களாகிய நமக்கு உண்மையான சோதனையாக உள்ளது. இறைவனின் மக்களாகிய நாம் பிறரைப் பறக்கணித்து, நமக்குள்ளே முடங்கி, தன்னலவாதிகளாக இருப்பதிலிருந்து வெளிவருவதற்கு அகவாழ்வில் புதுப்பித்தல் அவசியம். ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில் நம் மனச்சாட்சியைத் தட்டி எழுப்ப வேண்டும்.
கடவுள் இந்த நம் உலகின்மீது அக்கறையின்றி இல்லை. நம் மீட்புக்காகத் தம் மகனை அனுப்பும் அளவுக்கு அவர் நம்மீது அன்பு செலுத்துகிறார். இறைமகன் இயேசுவின் பிறப்பு, மரணம் மற்றும் அவரின் உயிர்ப்பில் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையேயுள்ள கதவு நம் அனைவருக்காகவும் திறக்கப்பட்டு விட்டது. திருஅவை அந்தக் கதவின் கையாக அதைத் திறந்து வைத்துக்கொண்டிருக்கிறது. திருஅவையாகிய இந்தக் கை புறக்கணிக்கப்படும்போது, நசுக்கப்படும்போது மற்றும் காயப்படும்போது அது ஒருபோதும் வியப்படைவதில்லை. இறைமக்களுக்கு ஆன்மீகப் புதுப்பித்தல் அவசியம். இதற்கு உதவியாக மூன்று விவிலியப் பகுதிகளைத் தருகிறேன் என்று அப்பகுதிகள் பற்றி விளக்கியுள்ளார் திருத்தந்தை.
1. “ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும்” (1 (1கொரி.12,26)- திருஅவை
2. “உனது சகோதரன் எங்கே? ” (தொ.நூ.4,9)
3. “உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள்!”(யாக்.5,8)
திருஅவை, சிறப்பாக, நம் பங்குத்தளங்களும், நம் சமூகங்களும் பிரசன்னமாக இருக்கும் அனைத்து இடங்களும் புறக்கணிப்புக் கடலின் மத்தியில் கருணையின் தீவுகளாக மாற வேண்டுமென்று விரும்புகிறேன். கிறிஸ்து நமக்குப் பணிவிடை புரிய அனுமதிப்பதன்மூலம் நாமும் அவர்போல் ஆகிறோம், இறைவார்த்தையைக் கேட்கும்போதும், அருளடையாளங்களை, குறிப்பாக, திருநற்கருணையைப் பெறும்போதும் இது நம்மில் நடைபெறுகின்றது, கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் எவரும் ஒரே உடலாக உள்ளார்கள், அவரில் வாழும் நாம் ஒருவர் மற்றவரைப் புறக்கணித்து வாழ இயலாது. கருணையுள்ள இதயம் பலவீனமான இதயம் என்று அர்த்தமல்ல. மாறாக அது உறுதியான மற்றும் வலுவான இதயம். கருணையுடன் வாழ விரும்புவோருக்கு, சோதிப்பவனுக்கு இதயத்தை மூடி கடவுளுக்கு இதயத்தைத் திறக்கும் உறுதியான இதயம் அவசியம். சோதிப்பவனை விரட்டி, ஒன்றிணைந்து செபிப்பதால் நிறைய பலன்கள் கிட்டுகின்றன. வருகிற மார்ச் 13, 14ம் தேதிகளில் உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும் கடைப்பிடிக்கப்படும் 24 மணி நேர செப முயற்சி, பிறரன்புச் செயல்களைச் செய்யத் தூண்டும் என்று நம்புகிறேன். உலகமயமாக்கப்பட்டுள்ள புறக்கணிப்பு நிலையைக் களைவதற்கு நம்மைப் புதுப்பிப்போம். இயேசுவே, “உமது இதயத்தைப் போல எம் இதயங்களை அமைத்தருளும்” (Fac cor nostrum secundum cor tuum) என்று இத்தவக்காலத்தில் செபிப்போம்.
இவ்வாறு தனது இவ்வாண்டு தவக்காலச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |