2015-02-25 14:51:00

அமைதி ஆர்வலர்கள்: 1974ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது-பாகம் 1


பிப்.25,2015. Eisaku Sato, Seán MacBride ஆகிய இருவருக்கும் 1974ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. Eisaku Sato (1901-1975) அவர்கள், ஜப்பானிய அரசியல்வாதி. இவர் ஜப்பானிய பிரதமராக அந்நாட்டு வரலாற்றில் அதிக காலம் பதவியில் இருந்தவர். இவரது ஆட்சிக் காலத்தில்தான் ஜப்பான் நாடு தனது மிகப்பெரும் பொருளாதார வல்லமையை, பன்னாட்டுச் சூழலில் அரசியல் சக்தியாக உயர்வடையச் செய்தது. Seán MacBride அவர்கள், பிரான்சில் பிறந்து அயர்லாந்தில் இறந்தவர். மனித உரிமை ஆர்வலராகிய MacBride அவர்கள், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனும் அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராவார். 

Eisaku Sato, ஜப்பானின் சாமுராய் பரம்பரையில் Choshu மாநிலத்தில் Yamaguchiல் 1901ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பிறந்தார். Yamaguchi நகரம், முக்கிய நிலம் என அழைக்கப்படும் Honshu தீவின் தலைநகர் ஆகும். Honshu, ஜப்பானில் மக்கள்தொகை அதிகமாகவுள்ள பெரிய தீவாகும். Sato பிறந்து வளர்ந்த Choshu மாநிலம், Satoவின் முப்பாட்டனார் உட்பட, தலைமைத்துவப் பணியில் ஆதிக்கம் செலுத்தி வந்ததாகும். ஜப்பானில், 1868ம் ஆண்டில் Tokugawa shogunate ஆட்சியைக் கவிழ்த்து, புதிய ஜப்பானிய பேரரசு அரசை உருவாக்கிய இயக்கத்தில் Satoவின் சொந்த Choshu மாநிலம் முக்கிய அங்கம் வகித்தது. Tokugawa bakufu எனவும் அழைக்கப்படும் Tokugawa shogunate என்பது, ஜப்பானில் கடைசியாக ஆட்சி செய்த, நிலப்பண்ணைமுறை சார்ந்த இராணுவ அரசாகும். இவ்வரசு அமைப்பு, 1603ம் ஆண்டு முதல் 1868ம் ஆண்டு வரை இருந்து வந்தது. ஜப்பானில், Meiji பேரரசரின் காலத்தில் அதாவது 1868ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி முதல் 1912ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி வரை இடம்பெற்ற புரட்சிகள், சீர்திருத்தங்கள் மற்றும் புதுப்பித்தலுக்குப் பின்னர், Yamaguchiயில் ஆட்சியில் இருந்தவர்கள், அந்நாட்டுக்கு அதிகமான பிரதமர்களை வழங்கியுள்ளனர். Meiji பேரரசரின் காலத்தில் ஜப்பான் நாடு நவீன வடிவம் பெற்றது. Satoவின் மூத்த சகோதரர் Ichiro, கடற்படைத் தளபதியாக இருந்து, இரண்டாம் உலகப் போருக்குச் சற்று முன்னதாக ஓய்வு பெற்றார். இவரின் மற்றொரு மூத்த சகோதரர் Nobusuke Kishi, Hideki Tojo அமைச்சரவையில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். கடுங்குற்றவாளியாக மூன்றாண்டுகள் சிறையில் இருந்த Kishi, பின்னர் முற்போக்கு சனநாயகக் கட்சியைத் தொடங்கி, 1957ம் ஆண்டு முதல் 1960ம் ஆண்டுவரை ஜப்பானின் பிரதமராகப் பணியாற்றினார். எனவே Satoவும் அரசியல் ஆர்வம் அதிகமாக இருந்த சூழலில் வளர்ந்தார். நாட்டுக்குச் சேவை செய்வதில் தனது மகன் கொண்டிருந்த கடமையுணர்வைப் பார்த்து இவரின் தாய் மிகவும் மகிழ்ந்தார் எனச் சொல்லப்படுகிறது.

Sato அவர்கள், டோக்கியோ பேரரசு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றது, அவர் ஜப்பானிய சமுதாயத்தில் வெற்றி பெற ஏணியாக உதவியது. இங்கு ஜெர்மன் சட்டக் கல்வியையும் படித்தார். இவர் சில காலம் நிதி அமைச்சகத்தில் வேலை செய்தார். ஆனால் இப்பணி எவ்வித வாய்ப்புக்களையும் அளிக்காததால் போக்குவரத்துத் துறையில் பணியில் சேர்ந்தார். இவரது மூத்த சகோதரர் Kishi, வணிக மற்றும் தொழிற்சாலை அமைச்சகத்தில் வேகமாக உயர்ந்தது போன்று இல்லாமல் இவர் சிறு பதவிகளிலிருந்து படிப்படியாக உயர்ந்து இறுதியில் மோட்டார் வாகனத் துறையின் இயக்குனரானார். அத்துறையின் உதவி அமைச்சரோடு ஏற்பட்ட வாக்குவாதங்களைத் தொடர்ந்து இவர் ஒசாகாவுக்கு அனுப்பப்பட்டார். 2ம் உலகப் போர் முடிந்தவுடனேயே இவர் இரயில்வே நிர்வாகத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். பின்னர் விரைவிலேயே உதவி போக்குவரத்துத் துறை அமைச்சராக உயர்ந்தார். இச்சமயத்திலிருந்து Sato அரசியல் களத்தில் முன்னேறினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானில் பெருமளவான அரசியல்வாதிகள் செல்வாக்கை இழந்ததால், புதிய உறுப்பினர்கள் நாடாளுமன்ற அரசியலில் நுழைய வாய்ப்புக் கிடைத்தது. 1946ல் ஜப்பானின் பிரதமராகப் பணியைத் தொடங்கிய Shigeru Yoshida (1946-1947,1948-1954) அவர்கள், பெரும்பாலும் முன்னாள் அரசியல்வாதிகளை வைத்தே ஆட்சியை அமைத்தாலும், பிரச்சனைக்குரிய புதிய தொழிற்சங்கங்களை Sato கையாண்ட திறமை அவரின் கவனத்தை ஈர்த்தது. இதனால் 1948ல் அமைச்சகத்தின் தலைமைச் செயலராக Sato அவர்களை நியமித்தார். Yoshidaவுடன் பல ஆண்டுகள் நல்லுறவுடன் விசுவாசத்துடன் பணிசெய்தார் Sato. ஆயினும் கப்பல் நிறுவனம் தொடர்பான சட்டமுறையான குற்றச்சாட்டுகளிலிருந்தும், சிறைத் தண்டனையிலிருந்தும் Satoவைக் காப்பாற்றுகிறார் என்று 1954ம் ஆண்டில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார் பிரதமர் Yoshida. ஆனால் தான் குற்றமற்றவர் என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்தார் Sato.

Satoவின் மூத்த சகோதரர் Nobusuke Kishi, 1957 முதல் 1960 வரை பிரதமராகப் பணியாற்றினார். அச்சமயம் Sato நிதி அமைச்சரானார். 1960ல் Kishi ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு Hayato Ikeda பிரதமரானார். ஆனால் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் நிலையில் இருந்ததால், 1964ல் கட்சித் தலைமையை Sato ஏற்றார். பிரதமராகவும் அறிவிக்கப்பட்டார். அச்சமயத்தில் பல்கலைக்கழகங்களில் காணப்பட்ட நெருக்கடிகள், ஜப்பானிய-அமெரிக்க உறவில் இருந்த பிரச்சனைகள் இவையிரண்டும் இவருக்கு முக்கிய சவால்களாக இருந்தன. ஏறத்தாழ எல்லாப் பல்கலைக்கழகங்களையும் பாதித்திருந்த ஒழுங்கற்ற நிலைகளைக் களைவதற்கு மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் இவர் தாக்கல் செய்தார். ஒன்பது மாதங்களுக்குமேல் ஒழுங்கற்ற நிலைகள் நீடித்தால் கல்வி அமைச்சகம் அப்பள்ளியை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும் மசோதா அது.

மேலும், Okinawa தீவை ஜப்பான் இறையாண்மைக்குள் 1972ம் ஆண்டுக்குள் மீண்டும் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தையை முடிப்பது தொடர்பாக 1969ம் ஆண்டு நவம்பரில் வாஷிங்டன் சென்றார் இவர். வாஷிங்டனிலிருந்து திரும்பியவுடன் டிசம்பரில் நாடாளுமன்றத்தைக் கலைத்து 27ம் தேதி பொதுத் தேர்தலை நடத்தினார். அதில் இவரது கட்சி வெற்றி பெற்றது. Okinawa மற்றும் Ryukyu தீவுகளை, ஜப்பான் இறையாண்மைக்குள் 1972ம் ஆண்டுக்குள் மீண்டும் இணைப்பது குறித்த உடன்பாட்டில் 1971ம் ஆண்டு ஜூனில் அமெரிக்காவும் ஜப்பானும் கையெழுத்திட்டன. 1972ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த உடன்பாட்டை இவ்விரு நாடுகளும் அமல்படுத்தின. இதே ஆண்டு ஜூனில், 71 வயதான பிரதமர் Sato, தனது பதவியை விட்டு விலகினார் Eisaku Sato. ஜப்பானிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் உறுதியான நிலை தொடர்ந்து நிலவ இவர் ஆற்றிய பணிகள் மற்றும் அணு ஆயுதங்கள் குறித்த அவரின் கொள்கைகளுக்காக 1974ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றார் Eisaku Sato. இவர், 1975ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி டோக்கியோவில் காலமானார். இவரோடு இவ்விருதைப் பகிர்ந்து கொண்ட Seán MacBride பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.