2015-02-24 15:33:00

கந்தமால் மறைசாட்சிகளுக்கு நினைவுச்சின்னம்


பிப்.24,2015. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 2008ம் ஆண்டில் இடம்பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு முதன் முறையாக நினைவுச்சின்னம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டில் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற  வன்முறையில் கொல்லப்பட்ட Tiangia கிராமத்தின் ஏழு மறைசாட்சிகளை நினைவுகூருவதற்கென Tiangia கிராமத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் முதல் நினைவுச்சின்னத்தை  எழுப்பியுள்ளனர். இதனை கட்டக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் ஆசிர்வதித்துள்ளார்.

இந்த ஏழு மறைசாட்சிகளும், கந்தமால் மற்றும் பிற இடங்களின் மக்களுக்குச் சாட்சித் தூண்களாக உள்ளனர் என்றுரைத்த பேராயர் ஜான் பார்வா அவர்கள், இயேசு மீது கொண்டிருந்த அன்புக்காகத் தங்கள் உயிரைக் கையளித்த இத்தகைய மனிதர்களுக்காக இறைவனுக்கு நன்றி கூருவோம் என்றார்.

Tiangia கிராம ஏழு மறைசாட்சிகள் - அ.பணி Bernard Digal (இறப்பு அக்.28,2008), Trinath Digal (25 ஆகஸ்ட் 2008), Bikram Nayak (25 ஆகஸ்ட் 2008), Parikhit Nayak (27 ஆகஸ்ட் 2008), Darasantha Pradhan (25 ஆகஸ்ட் 2008), Dibyasing Digal (25 ஆகஸ்ட் 2008), Dinabandhu Pradhan (27 ஆகஸ்ட் 2008).

இதற்கிடையே, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தங்கள் அமைப்பின் ஐம்பதாவது ஆண்டு நிறைவைச் சிறப்பிப்பதற்கு கந்தமால் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது அப்பகுதி கிறிஸ்தவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

கந்தமாலில் 2007ம் ஆண்டு டிசம்பரில் வெடித்த கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையில் 900 வீடுகளும் நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் 395 ஆலயங்களும், 5,500க்கு அதிகமான வீடுகளும் தீயிட்டு கொளுத்தப்பட்டன, ஏறக்குறைய நூறு பேர் கொல்லப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகினர்.   

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.