2015-02-24 15:37:00

கடந்த எழுபது ஆண்டுகளில் ஐ.நா.வின் பணிகள்


பிப்.24,2015. ஐக்கிய நாடுகள் நிறுவனம் கடந்த எழுபது வருடப் பணியில் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளது மற்றும் அளப்பரிய வாய்ப்புகளும் அதற்குக் காத்திருக்கின்றன என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

மற்றுமோர் உலகப்போரைத் தவிர்ப்பதற்காக ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கப்பட்டது, அதில் வெற்றியும் கண்டுள்ளது என்றுரைத்த பான் கி மூன் அவர்கள், இனப்படுகொலைகள், ஆயுதத் தாக்குதல்கள் போன்றவை இடம்பெற்றிருந்தாலும், கடந்த எழுபது ஆண்டுகளில் இரத்தம் சிந்தும் உலகப் போர் இடம்பெறவில்ல என்று கூறினார்.

அமைதிக்கும், பாதுகாப்புக்கும், பசிப்பிணியைப் போக்குவதற்கும், பெண்களின் மேம்பாட்டுக்கும், அனைத்துலக சட்டத்தை ஊக்குவிப்பதற்கும் ஐ.நா. குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளது என்றும் அவர் கூறினார். 

1945ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.