2015-02-24 11:03:00

அன்னை தெரேசா மீதான அவதூறுக்கு இந்திய ஆயர்கள் கடும் கண்டனம்


பிப்.24,2015. தூய மனிதர் அருளாளர் அன்னை தெரேசா மீதும், ஏழைகள், கைவிடப்பட்டவர், நோயாளிகள் போன்றோருக்கு அவர் தனது வாழ்வில் நீண்ட காலம் ஆற்றிய மனிதாபிமானப் பணிகள் மீதும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோகன் பாகவத் (Mohan Bhagwat) அவர்கள் பழிகளைச் சுமத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று இந்திய ஆயர்கள் இச்செவ்வாயன்று கூறியுள்ளனர். 

உலகப் புகழ்பெற்ற நொபெல் அமைதி விருது, பாரத ரத்னா விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ள அருளாளர் அன்னை தெரேசா அவர்களை, இத்தகைய உண்மையல்லாத சர்ச்சைகளில் சிக்கவைப்பது, தேவையற்ற செயல் என்று CBCI என்ற இந்திய ஆயர்கள் பேரவை கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அன்னை தெரசாவின் சேவை நல்லதாக இருந்தாலும், கிறிஸ்தவராகிய அவர் மத மாற்றம் செய்வதையே தனது பணியின் நோக்கமாகக் கொண்டிருந்தார் என, ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாகவத் அவர்கள் இத்திங்களன்று ராஜஸ்தானில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இதற்கு, தமிழக அரசியல்வாதிகள் உட்பட இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், கிறிஸ்தவத் தலைவர்களும், இந்தியக் குடிமக்கள் பலரும் தங்களின் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். 

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் மனிதாபிமானிகளில் ஒருவர் அன்னை தெரேசா என்று குறிப்பிட்டுள்ள இந்திய ஆயர்கள், அன்னை தெரேசா ஒருபோதும் மறைவாக எதையும் செய்தது கிடையாது என்றும், மதமாற்றத்துக்காக அவர் ஒருபோதும் தனது பணிகளைப் பயன்படுத்தியது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் இக்கூற்றுக்குக் கண்டனம் தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் அவர்கள், கொல்கத்தாவிலுள்ள அன்னை தெரசாவின் நிர்மல் ஹிருதய இல்லத்தில் அன்னை தெரசாவுடன் தான் சில மாதங்கள் பணி செய்ததாகவும், அன்னை தெரசா, தூய்மையான இதயமுள்ளவர், அவரின் வாழ்வை இவ்வாறு இழிவுபடுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்தியாவை ஆளும் பிஜேபி கட்சி இதற்கு மன்னிப்புக் கோருமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.            

கொல்கத்தாவில் ஏழையிலும் கடும் ஏழைகளாய் இருந்த மக்களுக்குப் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் பணியாற்றிய அன்னை தெரேசா அவர்கள், பிறரன்பு மறைபோதகச் சபையை நிறுவியவர் மற்றும் 1979ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதையும் பெற்றிருப்பவர். 

ஆதாரம் : CBCI /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.