2015-02-23 16:02:00

ஆப்கானில் கடத்தப்பட்ட தமிழக அருள்பணி பிரேம் குமார் விடுதலை


பிப்.23,2015.  ஆப்கானிஸ்தானில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட தமிழக இயேசு சபை அருள்பணியாளர் அலெக்சிஸ் பிரேம் குமார் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு, இஞ்ஞாயிறு மாலை இந்தியா வந்தடைந்தார்.

JRS என்ற இயேசு சபையினரின் அனைத்துலக புலம்பெயர்ந்தோர் பணி அமைப்பின் ஆப்கான் பொறுப்பாளரான அருள்பணி அலெக்சிஸ் பிரேம் குமார் அவர்கள், ஆப்கானிஸ்தானின் Zendjan மாவட்டத்தில் ஆப்கான் அகதி குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை சந்திக்கச் சென்றவேளையில் கடந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி முஸ்லிம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.

அருள்பணி பிரேம்குமாரை மீட்க, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என, பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்து, நடவடிக்கையும் எடுத்துள்ளதைத் தொடர்ந்து, இஞ்ஞாயிறன்று அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த விடுதலையைப் பெற்றுத்தர உதவிய மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அருள்பணி பிரேம்குமாரும், அவரது தந்தை, முன்னாள் தலைமையாசிரியர் அந்தோணிசாமி அவர்களும் நன்றியை வெளியிட்டுள்ளனர்.

ஈரான் மற்றும் பாகிஸ்தானில் வாழும் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாடு திரும்புவதற்கும், அவர்களைக் குடியமர்த்தவும் உதவிவரும் JRS அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய அருள்பணி பிரேம்குமார் அவர்கள், தான் கடத்தப்படுவதற்கு சில நாட்கள் முன்னர்தான் ஈரான் மற்றும் பாகிஸ்தானில் அகதி மக்களை சந்தித்துத் திரும்பியிருந்தார்.

2013ம் ஆண்டில் மட்டும் ஆப்கானிஸ்தானின் 6000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது இயேசுசபையின் JRS அமைப்பு.

இவர் கடத்தப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர்தான் ஹெராத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகம் நான்கு ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளால் வெடிகுண்டுகளாலும் இயந்திரத் துப்பாக்கிகளாலும் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தது.

தற்போது விடுவிக்கப்பட்டுள்ள இயேசுசபை அருள்பணி பிரேம்குமார், நான்காண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் வாழும் இலங்கையின் புலம்பெயர்ந்த மக்களோடு பணியாற்றியவர்.

ஆதாரம் : IANS /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.