2015-02-20 16:47:00

மறைசாட்சித்தன்மை, மதங்கள் மத்தியில் அமைதியைக் கொண்டுவரட்டும்


பிப்.20,2015. லிபியாவில் கொல்லப்பட்ட 21 எகிப்திய குடிமக்களுக்காக ஆசியர்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர் என்று எகிப்து மற்றும் லிபியக் கிறிஸ்தவச் சமூகங்களுக்கு அனுப்பியுள்ள அனுதாபச் செய்தியில் கூறியுள்ளார் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

எகிப்திய காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் திருத்தந்தை 2ம் Tawadrous, Tripoli அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli ஆகிய இருவருக்கும் அனுப்பியுள்ள அனுதாபச் செய்தியில், ஆசியர்கள் செபத்தில் தலைவணங்கி தங்களின் அனுதாபத்தைத் தெரிவிக்கின்றனர் என்று கூறியுள்ளார் கர்தினால் கிரேசியஸ்.

இக்கொலைக் குற்றங்களைப் புரிந்தவர்கள் மனம் மாற வேண்டுமென்று அவர்களுக்காகச் செபிப்பதாகக் குறிப்பிட்டுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இந்த 21 காப்டிக் கிறிஸ்தவ இளையோர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

தவக்காலத்தின் முதல் வெள்ளிக்கிழமையாகிய இன்று தனது அனுதாபத்தைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மரணத்தின் முன்பாக இந்த மறைசாட்சிகள் அதிகப்படியான துணிச்சலைக் காட்டியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இவர்களின் மறைசாட்சித்தன்மை, அனைத்து மதங்கள் மத்தியில் உரையாடலையும், அமைதியையும் கொண்டுவரும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் கர்தினால் கிரேசியஸ்.

மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இந்திய இலத்தீன் ஆயர் பேரவை(CCBI), ஆசிய அயர் பேரவைகள் கூட்டமைப்பு(FABC) ஆகிய இரண்டின் தலைவராவார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.