2015-02-20 16:43:00

புதியவழி நற்செய்திப் பணிக்கு உண்ணா நோன்பும் செபமும் அவசியம்


பிப்.20,2015. சிங்கப்பூரில் புதியவழியில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிப்பதற்கு உண்ணா நோன்பும் செபமும் தேவைப்படுகின்றன என்று அந்நாட்டுப் பேராயர் ஒருவர் கூறினார்.

தவக்காலத்துக்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள சிங்கப்பூர் பேராயர் William Goh அவர்கள், சிங்கப்பூரில் புதியவழியில் நற்செய்தி அறிவிக்கும் பணி வெற்றியடைவதற்குத் தன்னோடு சேர்ந்து உண்ணா நோன்பைக் கடைப்பிடிக்குமாறு விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

செபம் மிகவும் சக்தி வாய்ந்தது, அது நோன்புடன் சேர்ந்து சென்றால் மேலும் அதிகப் பலனளிக்கும் என்றும், இயேசு நாற்பது நாள்கள் நோன்பிருந்து எவ்வாறு தம்மைத் தம் திருப்பணிக்கு தயாரித்தாரோ அவரைப் பின்பற்றி நாமும் புதியவழியில் நற்செய்தி அறிவிக்கும் பணிக்கு நம்மைத் தயாரிப்போம் என்றும் கூறியுள்ளார் பேராயர் Goh.

மதத்திற்கு எதிரான உலகப்போக்கைத் தோற்கடிக்கவும், சமுதாயத்தில் அதிகரித்துவரும் தனிமனிதக் கோட்பாடு, பொருளியக் கோட்பாடு, நன்னெறி வாழ்வுச் சிதறல் போன்றவற்றை எதிர்க்கவும்  உண்ணா நோன்பும் செபமும் முக்கியம் என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் சிங்கப்பூர் பேராயர் Goh.

சிங்கப்பூர் மக்கள்தொகையில் ஏறக்குறைய ஐந்து விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.