2015-02-20 15:41:00

திருத்தந்தை பிரான்சிஸ், உக்ரேய்ன் ஆயர்கள் சந்திப்பு


பிப்.20,2015. உக்ரேய்னில் அமைதியை ஏற்படுத்துவதற்கு முயற்சித்துவரும் அனைவரும் அனைத்துலகச் சட்டத்தை மதித்து ஒரு தீர்வுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உக்ரேய்ன் நாட்டின் கிரேக்க வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்களை அத் லிமினா சந்திப்பை முன்னிட்டு இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரேய்னில் மீண்டும் சண்டை இடம்பெறுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில், அண்மையில் கையெழுத்திடப்பட்ட இடைக்கால போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

உக்ரேய்னில் பல மாதங்களாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்கள், அதில் அப்பாவி மக்கள் தொடர்ந்து பலியாகி வருவது, இன்னும், அந்நாடு வரலாற்றில் எதிர்கொண்டுள்ள கடுமையான நிகழ்வுகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய  திருத்தந்தை, ஆயர்கள் தாங்கள் வாழும் சூழல்களில் மக்களின் குரல்களுக்குக் கவனமுடன் செவிசாய்க்குமாறும் வலியுறுத்தினார்.

ஆயர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள், அவர்களின் மேய்ப்புப்பணித் திட்டங்கள் ஆகியவற்றைத் தான் கவனமுடன் அறிந்துவருவதாகவும், அப்பிரச்சனைகளையும், ஆயர்களையும் அன்னை மரியின் அரவணைப்பில் வைப்பதாகவும் கூறினார் திருத்தந்தை.

நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஆயர்கள் தங்களின் எண்ணங்களை எடுத்துரைப்பதற்கு உரிமையைக் கொண்டுள்ளனர் என்றும், இதனை அரசியல் செயல்திட்டமாக அல்லாமல், பொதுநலன் மற்றும் இணக்கவாழ்வை ஏற்படுத்துவதில் ஆயர்கள் கொண்டிருக்கும் இடைவிடாத ஏக்கத்தைக் கருத்தில் கொண்டு தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

உக்ரேய்ன் ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துரையாடுவதற்கு வசதியாக, அவர்களுக்கென திருத்தந்தை தயாரித்திருந்த உரை ஆயர்களிடம் கொடுக்கப்பட்டது.

ஆதாரம்:வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.