2015-02-20 15:49:00

அநீதிகளை மறைப்பதற்கு கடவுளை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்


பிப்.20,2015. அநீதிகளை மூடிமறைப்பதற்கு கடவுளை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் என்றும், நோன்பு, பிறரன்புச் செயல்கள் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் தங்களை உட்படுத்தாமல், தேவையில் இருப்போரை நாடிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலையில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் இறையன்புக்கும் பிறரன்புக்கும் ஏற்ற வகையில், குறிப்பாக இத்தவக்காலத்தில் வாழுமாறு கூறினார்

திருஅவைக்கு காசோலை அனுப்பிவிட்டு தன்னிடம் வேலை செய்வோரிடம் நியாயமற்று நடந்துகொள்தல் பற்றி எச்சரித்த திருத்தந்தை, மக்கள் ஆண்டவர் முன்னிலையில் தங்களின் நோன்பு ஏற்கப்படுவதில்லை என முறையிடுகின்றனர், ஆனால் உண்மையாக நடந்துகொள்வதற்கும், கடமைக்கென செயல்படுவதற்குமிடையே உள்ள வேறுபாட்டை அறிந்திருக்க வேண்டுமென்று கூறினார்.

இன்றைய முதல் வாசகமான எசாயா இறைவாக்கினர் பகுதியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, ஆண்டவருக்கு நோன்பு என்பது, மாமிசம் சாப்பிடாமல் இருப்பது அல்ல, ஆனால், பணியாளர்களிடம் சண்டை போடாமல் இருப்பதும், அவர்களைப் பயன்படுத்தாதிருப்பதுமே நோன்பு என்று கூறினார்.

இதயத்தின் உண்மையின்படி நடக்காமல் வெளிப்புறத்தில் சட்டங்களைக் கடைப்பிடிக்கும் பரிசேயரின் வெளிவேடத்தை இயேசு இதனாலே கண்டித்தார் என்றுரைத்த திருத்தந்தை, இறையன்பும் பிறரன்பும் ஒன்றிணைந்து செல்ல வேண்டுமென்று கூறினார். 

கொடுமைத் தளைகளை அவிழ்ப்பது, ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்வது, உடையற்றோரை உடுத்துவது, நீதி வழங்குவது ஆகியவையே இயேசுவுக்கு உண்மையான நோன்பாகும், நோன்பு வெளிப்புற நடவடிக்கை அல்ல, அது இதயத்திலிருந்து வரவேண்டும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம் என்று திருத்தூதர் யாகப்பர் கூறுகிறார், ஞாயிறுதோறும் தவறாமல் திருப்பலிக்குச் சென்று திருநற்கருணை வாங்கும் ஒருவர் தனது வேலையாளுக்கு நியாயமான கூலி கொடுக்காமலும், ஓய்வூதியத்துக்குப் பணம் செலுத்தாமலும் இருந்தால் அவரின் விசுவாசத்தால் என்ன பயன் என்ற கேள்வியையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்:வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.