2015-02-19 15:44:00

திருத்தந்தையின் கேள்வி : இவ்வுலகப் புகழா, இறைவனா


பிப்.19,2015 தற்காலிகமான, சிறுமைப்படுத்தும் இவ்வுலகப் புகழைத் தேடிச் செல்கிறோமா, அல்லது, கடவுளைத் தேடிச் செல்கிறோமா என்ற கேள்வியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை ஆற்றிய மறையுரையில் முன் வைத்தார்.

"வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்" என்று இறைவன் மோசே வழியாகக் கூறும் வார்த்தைகளை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கினார்.

உண்மைக் கடவுளைத் தேர்ந்தெடுப்பதற்கும், பொய்க் கடவுளைத் தேர்ந்தெடுப்பதற்கும் சக்தி பெற்றுள்ள நாம், கூட்டத்தைப் பின்பற்றும் இயல்பு கொண்டவர்களாய் இருப்பதால், மற்றவர்களைப்போல வாழ விழைகிறோம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? என்று நற்செய்தியில் எழுப்பப்பட்டுள்ள கேள்வியை நினைவுருத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவறானவற்றைத் தேர்வதால் நாம் அடையும் இழப்புக்களைக் குறித்துப் பேசினார்.

"ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டோரே பேறுபெற்றோர்" என்று பதிலுரைப் பாடலில் கூறிய வார்த்தைகளை தன் மறையுரையின் இறுதியில் வலியுறுத்திய திருத்தந்தை, இன்றே, இப்போதே இறைவனைத் தேர்ந்து, அவரில் நம்பிக்கை கொள்வதே நம்மை வாழ்வுக்கு இட்டுச் செல்லும் என்று எடுத்துரைத்தார்.

மேலும், “தங்கள் வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணித்துள்ள ஆண்களும், பெண்களும் எங்கெல்லாம் உள்ளனரோ, அங்கெல்லாம் உங்களால் மகிழ்வைக் காணமுடியும்” என்ற வார்த்தைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் Twitter செய்தியாக இவ்வியாழனன்று வெளியிட்டார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.