2015-02-19 15:52:00

திருத்தந்தை : கண்ணீர் வடிப்பது, கடவுளிடமிருந்து வரும் கோடை


பிப்.19,2015 "முழு இதயத்தோடு திரும்பி வருதல்" என்பது, மேலோட்டமான, தற்காலிகமான மனமாற்றம் அல்ல, மாறாக, நம் ஆழ்நிலை மனிதத்தன்மையைத் தொடுவது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

பிப்ரவரி 18, இப்புதன் மாலை 5 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித சபீனா பசிலிக்காவில் ஆற்றிய திருநீற்றுப் புதன் திருப்பலியில் இறைவாக்கினர் யோவேல் நூலில் காணப்படும் "உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்" (யோவேல் 2:12) என்ற வார்த்தைகளுடன் தன் மறையுரையைத் துவக்கினார்.

"திரும்பி வருதல்" என்ற முயற்சி, தனிமனிதர்கள் மட்டும் மேற்கொள்ளும் முயற்சி அல்ல, மாறாக, அது கிறிஸ்தவ சமுதாயம் முழுமைக்கும் வழங்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

"ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம்" செபிக்கும்படி இறைவாக்கினர் கூறியுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, கண்ணீர் வடிப்பது, கடவுளிடமிருந்து பெறக்கூடிய ஒரு கோடை என்று சுட்டிக்காட்டினார்.

கண்ணீர் வடித்து வேண்டுவது, வெளிவேடமற்ற, உண்மையான உள்மன மாற்றத்தைக் கொணரும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

தானம், செபம், தவம், ஆகிய முயற்சிகளை விளம்பரத்திற்காகச் செய்யவேண்டாம் என்று இயேசு நற்செய்தியில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு நம்மிடம் உள்ள அடிப்படை ஆசையை மேற்கொள்வதும் தவக்காலத்தின் முயற்சியாக இருக்கவேண்டும் என்று கூறினார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.