2015-02-18 16:00:00

கர்தினால் பொறுப்பு, மியான்மார் திருஅவைக்குக் கிடைத்த பெருமை


பிப்.18,2015 தனக்கு வழங்கப்பட்டுள்ள கர்தினால் பொறுப்பு, தனக்குக் கிடைத்த பெருமை அல்ல, மாறாக, அது, மியான்மார் திருஅவைக்குக் கிடைத்த பெருமை என்று புதிய கர்தினால், Charles Maung Bo அவர்கள் கூறினார்.

பிப்ரவரி 14, கடந்த சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்கத் திருஅவையின் கர்தினால்கள் குழுவில் புதிதாக இணைத்த 20 கர்தினால்களில் ஒருவரான யாங்கூன் பேராயர், கர்தினால் Maung Bo அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.

உலகின் ஒரு மூலையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, திருஅவையின் தலைவராகப் பொறுபேற்றுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க சமுதாயத்தின் விளிம்பு நாடுகளில் ஒன்றான மியான்மாருக்கு வழங்கியிருக்கும் பெருமைக்கு கர்தினால் Maung Bo அவர்கள், தன் நன்றியைத் .தெரிவித்தார்.

மியான்மார் நாடு தன்னையே மீண்டும் கட்டியெழுப்ப மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளிலும் தலத்திருஅவை முக்கிய பங்கேற்கும் என்று கர்தினால் Maung Bo அவர்கள் வலியுறுத்தினார்.

தங்கள் உரிமைகளுக்காகப் போராடிவரும் இளையோரின் முயற்சிகள் நியாயமானவை என்று கூறிய கர்தினால் Maung Bo அவர்கள், வன்முறையைக் கைகொள்ளாமல், நீதியான வழியில் போராடும் இளையோருக்கு தலத்திருஅவையின் ஆதரவு உண்டு என்றும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.