2015-02-18 14:44:00

அமைதி ஆர்வலர்கள் – நொபெல் அமைதி விருதைப் பெற மறுத்தவர்


பிப்.18,2015. 1972ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. ஆல்பிரட் நொபெல் அவர்கள் எழுதி வைத்துள்ள உயிலின்படி இவ்விருது நிதி பொது சேமிப்பில் வைக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டின் நொபெல் அமைதி விருது, வியட்நாம் நாட்டின் Le Duc Tho, அமெரிக்க ஐக்கிய நாட்டின் 56வது பொதுச் செயலர் Henry Alfred Kissinger ஆகிய இருவருக்குமென அறிவிக்கப்பட்டது. வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பாரிசில் இவ்விருவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தினர் என்பதற்காக இவ்விருது இவ்விருவருக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால் நொபெல் அமைதி விருதைப் பெறுவதற்கு Le Duc Tho மறுத்துவிட்டார். இந்த மறுப்புக்கான காரணங்களை நொபெல் அமைதி விருது குழுவுக்கு எழுதினார் Le Duc Tho.

பாரிஸ் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படவில்லை, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசும், தென் வியட்நாம் அரசும் பாரிஸ் அமைதி ஒப்பந்தங்களின் பல முக்கிய கூறுகளைக் கடுமையாக மீறுகின்றன, தென் வியட்நாமின் சாய்கான் அரசு, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசால் ஊக்கப்படுத்தப்பட்டு உதவிகளையும் பெற்று, தொடர்ந்து போர்ச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது, தென் வியட்நாமில் இன்னும் அமைதி ஏற்படவில்லை, இச்சூழல்களில் இந்த அமைதி விருதை என்னால் ஏற்க முடியாது, வியட்நாம் குறித்த அமைதி ஒப்பந்தம் மதிக்கப்பட்டு, ஆயுதங்களின் சப்தங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.  தென் வியட்நாமில் உண்மையான அமைதி நிலவினால் இவ்விருதை ஏற்பது குறித்து என்னால் சிந்திக்க இயலும், அதுவரை இதை என்னால் ஏற்க முடியாது. நொபெல் விருது குழுவுக்கு எனது நன்றி, எனது உண்மையான மரியாதையுடன் இவ்வாறு சொல்கிறேன், இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நொபெல் விருது குழுவுக்குக் கடிதம் அனுப்பி விட்டார் Le Duc Tho.

1960களின் தொடக்கத்தில் வியட்நாம் போரில் அமெரிக்க ஐக்கிய நாடு முழுவீச்சுடன் ஈடுபட்டது. 1969ம் ஆண்டுக்கும், 1973ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பாரிஸ் அமைதிப் பேச்சுவார்த்தைகள் சில பொதுவிலும், சில இரகசியமாகவும் நடத்தப்பட்டன.  வியட்நாம் சனநாயகக் குடியரசின் பிரதிநிதியாக Xuân Thuỷ அவர்கள் தலைமையிலான குழு, பாரிசில் அதிகாரப்பூர்வ அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்த சமயம்,  Le Duc Tho, அமெரிக்க ஐக்கிய நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Henry Kissinger ஆகிய இருவரும் 1970ம் ஆண்டு பிப்ரவரி முதல் இரகசியமாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர். இதன் பயனாகவே இடைக்காலப் போர் நிறுத்தத்துக்கு இசைவு தெரிவித்த அமைதி ஒப்பந்தங்கள் 1973ம் ஆண்டு சனவரி 23ம் தேதியன்று பாரிசில் கையெழுத்திடப்பட்டன.

இதன்படி போர்க் கைதிகள் எண்பது நாள்களுக்குள் விடுதலை செய்யப்பட வேண்டும், போர் நிறுத்தம் அனைத்துலக குழு ஒன்றினால் கண்காணிக்கப்பட வேண்டும், தென் வியட்நாமில் சுதந்திர மற்றும் மக்களாட்சித் தேர்தல்கள் நடைபெற வேண்டும், தென் வியட்நாமுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு உதவிகளைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும், வட வியட்நாம் படைகள், தென் வியட்நாமில் தங்கியிருக்கலாம்...

இந்த அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தான 1973ம் ஆண்டு சனவரி 23ம் தேதியே அமலுக்கு வருகின்றது என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆயினும், தேவையை முன்னிட்டு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்தன. சில பகுதிகளில் மோதல்கள் தொடர்ந்தன. அமெரிக்க ஐக்கிய நாட்டு காலால் படைகள் மார்ச் 29ம் தேதிக்குள் அகற்றப்பட்டாலும், வட வியட்நாமில் குண்டு வெடிப்புகள் தொடர்ந்தன. போர் நிறுத்த ஒப்பந்தங்களை இரு தரப்பும் மீறுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்ததை முன்னிட்டு, 1973ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில், Le Duc Tho, Henry Kissinger ஆகிய இருவரும் பாரிசில் சந்தித்து, இந்த ஒப்பந்தங்கள் முழுவீச்சில் அமல்படுத்தப்படுவது பற்றி கலந்துபேசினர். இதன் பயனாக, இந்த ஒப்பந்தங்கள் முழுமையாய் அமல்படுத்தப்படுவதற்குத் தங்களின் முழு ஆதரவை அளிப்பதாக அமெரிக்க ஐக்கிய நாடும், வட வியட்நாமும் 1973ம் ஆண்டு ஜூன் 13ம் தேதியன்று கையெழுத்திட்டன.

1911ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி வியட்நாமின் Hà Nam மாநிலத்தில் Phan Đình Khải என்ற ஊரில் பிறந்த Le Duc Tho அவர்கள், ஒரு புரட்சியாளர், இராணுவ அதிபர், தூதரக அதிகாரி மற்றும் அரசியல்வாதி. 1930ம் ஆண்டில் இந்தோசீனா கம்யூனிசக் கட்சி தொடங்குவதற்கு இவர் உதவினார். வியட்நாமை ஆக்ரமித்திருந்த ப்ரெஞ்ச் காலனி ஆதிக்கத் தலைவர்கள் இவரை, 1930 முதல் 1936 வரையிலும், பின்னர் 1939 முதல் 1944 வரையிலும் சிறையில் வைத்திருந்தனர். 1945ம் ஆண்டில் இவர் விடுதலையடைந்த பின்னர், ப்ரெஞ்ச் காலனி ஆதிக்கத்துக்கு எதிராய் வியட்நாம் விடுதலை இயக்கத்தை நடத்துவதற்கு Viet Minhவுக்கு உதவினார். 1954ம் ஆண்டில் ஜெனீவாவில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்வரை இது இடம்பெற்றது. 1948ம் ஆண்டில் தென் வியட்நாமில் உதவிச் செயலராகவும், Cochinchina கழக கட்சியின் தலைவராகவும் இவர் செயலாற்றினார். 1955ம் ஆண்டில் வியட்நாம் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். அதுவே தற்போது வியட்நாம் கம்யூனிச கட்சியாக உள்ளது. தென் வியட்நாம் அரசுக்கு எதிராக 1956ம் ஆண்டில் தொடங்கிய கம்யூனிச கிளர்ச்சியை இவர் மேற்பார்வையிட்டார். 1963ம் ஆண்டில் இக்கட்சி உருவாகவும் ஆதரவளித்தார் Tho.

1978ம் ஆண்டு முதல் 1982ம் ஆண்டு வரை FUNSK என்ற தேசிய மீட்புக்கான கம்ப்பூச்சியன் கழகத்துக்கும், பின்னர் கம்ப்பூச்சிய மக்கள் குடியரசு உருவாகவும் இவர்  முக்கிய ஆலேசகராகப் பணியாற்றினார். கெமெர் ரூஜ் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் கம்போடியாவில் வியட்நாம் தலையிடாமல் இருப்பதிலும் இவர் கவனமாக இருந்தார்.  1973ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெறுவதற்கு மறுத்துவிட்ட  Le Duc Tho அவர்கள் 1990ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி இறந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.