2015-02-17 15:29:00

லிபியாவில் தொடர்ந்து பணியாற்ற ஆயர் உறுதி


பிப்.17,2015. லிபியாவில் வன்முறை அதிகரித்துவரும்வேளை, உரையாடலுக்கும், புரிந்துகொள்ளுதலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் தலைநகர் Tripoli அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்சோ மார்த்தினெல்லி.

Tripoli கடற்கரையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 21 காப்டிக் கிறிஸ்தவர்களைக் கொடூரமாய்க் கொலைசெய்துள்ளதை முன்னிட்டு லிபியாவை விட்டு வெளிநாட்டவர் வெளியேறு வருகின்றனர், ஆயினும் அந்நாட்டில் தங்கியிருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்களுடன் தங்கியிருந்து இயேசுவின் அன்பின் செய்திக்குச் சாட்சியாக வாழ விரும்புவதாகத் தெரிவித்தார் ஆயர் மார்த்தினெல்லி.

ஜிகாதி தீவிரவாதிகள் தற்போது Tripoli யில் இருப்பதை, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் உறுதிசெய்துள்ள ஆயர் மார்த்தினெல்லி, எந்நேரத்திலும் தானும், தனது பங்கு மக்களும் பயங்கரவாதிகளால் பிடிக்கப்படலாம் என்றும் கூறினார்.

லிபியாவில் நிலைமை மிகுந்த குழப்பமாக உள்ளது, அனைத்துக் குடிமக்களும் துன்புறுகின்றனர் என்றும் கூறினார் ஆயர் மார்த்தினெல்லி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.