2015-02-17 13:06:00

போருக்கு ஆயுதங்களை விற்கும் வணிகர்கள், மரண வியாபாரிகள்


பிப்.17,2015. வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமை மற்றும் அழிவை ஏற்படுத்தும் மனிதரின் திறமை குறித்துப் பேசினார்.

போர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் வணிகர்களை, மரண வியாபாரிகள் என்று கண்டித்துப் பேசிய திருத்தந்தை, வெறுப்பும், உடன்பிறப்புக் கொலையும், வன்முறையும் சங்கிலித்தொடராக இடம்பெற இவர்கள் உதவுகின்றனர் என்று குறை கூறினார்.

மனிதரின் தீயகுணத்தின்மீது கடவுள் காட்டும் கோபத்தால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பற்றிப் பேசும், தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இத்திருப்பலியின் முதல் வாசகத்தை (தொ.நூ.6:5-8;7,1-5,10) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, மனிதர் கடவுளைவிட அதிக வல்லமை படைத்தவராக தன்னைக் காட்டிக் கொள்கிறார், ஏனெனில், மனிதர், கடவுள் படைத்த நல்லவற்றை அழிக்கும் சக்தியைக் கொண்டிருக்கிறார் என்று கவலையுடன் கூறினார்.

மனிதர் தங்களின் தீய பண்புகளை வெளிப்படுத்திய சோதோம் கொமாரா, பாபேல் கோபுரம் போன்ற பல எடுத்துக்காட்டுகளை விவிலியத்தின் முதல் பிரிவுகளில் நாம் காண்கிறோம், தீமை, மனிதரின் உள்ளாழத்தில் மறைந்திருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

இவ்வளவு எதிர்மறையாகப் பேச வேண்டாம் என சிலர் என்னிடம் கூறுகின்றனர், ஆனால் உண்மை இதுவாகத்தான் உள்ளது, தினத்தாள்களை எடுத்தால் 90 விழுக்காட்டுக்கு அதிகமான செய்திகள் அழிவைப் பற்றியே உள்ளன. இதனை தினமும் பார்க்க முடிகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

மனிதரின் இதயத்தில் நடப்பது என்ன?, மனிதர் எப்போதும் தன்னிச்சையாகச் செயல்பட விரும்புகின்றனர், எதையாவது நான் செய்ய விரும்பினால், அதை என்னால் செய்ய முடியும், நான் போரை வரும்பினால் என்னால் போரிட முடியும் என்றும் மறையுரையில் கூறிய திருத்தந்தை, நமக்கு அடுத்திருப்பவர்க்கு எதிராக புறணி அல்லது அவதூறு பேசுவதை எச்சரித்தார்.

பொறாமையே, நாம் பிறர் பற்றி அவதூறாகப் பேசுவதற்கு நம்மை உந்தித் தள்ளுகிறது, இத்தீமை குறித்து இத்தவக்காலத்தில் சிந்திப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.