2015-02-17 15:13:00

இளையோரே, மகிழ்வாய் இருப்பதற்குத் துணிவைக் கொண்டிருங்கள்


பிப்.17,2015. ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும் மகிழ்வாயும், நிறைவாயும் இருப்பதற்கான தவிர்க்க இயலாத ஆவலை கடவுள் வைத்திருக்கிறார், இத்தேடல் எல்லாக் காலத்திலும், எல்லா வயதினரிடமும் உள்ளது என்று இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்” (மத்.5:8) என்ற தலைப்பில், வருகிற மார்ச் 29ம் தேதி குருத்தோலை ஞாயிறன்று மறைமாவட்ட அளவில் சிறப்பிக்கப்படும் முப்பதாவது உலக கத்தோலிக்க இளையோர் தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2016ம் ஆண்டு ஜூலையில் அடுத்த அனைத்துலக இளையோர் தினம் சிறப்பிக்கப்படும் கிராக்கோ(போலந்து) நோக்கி நம் ஆன்மீகப் பயணத்தைத் தொடருவோம் என்று இச்செய்தியை ஆரம்பித்துள்ள திருத்தந்தை, நன்மைத்தனம் மற்றும் மகிழ்வாய் இருப்பதற்குரிய உங்களின் ஒவ்வோர் ஆவலின் நிறைவையும் நீங்கள் கிறிஸ்துவில் கண்டுகொள்வீர்கள் என்று கூறியுள்ளார்.

கிறிஸ்து ஒருவரால் மட்டுமே உங்கள் உள்ளத்தின் ஆழத்திலுள்ள ஏக்கங்களைத் திருப்தி செய்ய முடியும், இந்த ஏக்கங்கள், இவ்வுலகின் ஏமாற்றும் வாக்குறுதி மேகங்களால் அடிக்கடி மறைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார் திருத்தந்தை.

இளையோரே, அன்புகூரவும், அன்புகூரப்படவும் நீங்கள் கொண்டிருக்கும் உங்களின் “விலைமதிப்பில்லாத புதையல்” அழிக்கப்படவோ அல்லது கெடுக்கப்படவோ அனுமதியாதீர்கள் என்றும் கேட்டுள்ள திருத்தந்தை, அன்புசெலுத்துவதற்கு மனிதர் அழைக்கப்பட்டுள்ளதன் அழகை மீண்டும் கண்டுணருங்கள், அதேநேரம் அன்பை குறைத்துக் கணிக்கும் எல்லாவற்றுக்கு எதிராகவும் போராடுங்கள் எனவும் ஊக்கப்படுத்தியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் நற்செய்தியில் ஒன்றிரண்டு வரிகளை வாசித்து விவிலியத்தில் கிறிஸ்துவைச் சந்திப்பதற்கு முயற்சி செய்யுங்கள், மகிழ்வாய் இருப்பதற்குத் துணிச்சலைக் கொண்டிருங்கள், உங்கள் சகோதர சகோதரிகளின் முகங்களில் கடவுளை நீங்கள் காண முடியும், பிறரன்புச் செயல்களில் ஈடுபடுங்கள் என்றும் இளையோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.