2015-02-16 16:51:00

வீடற்ற மக்களுக்கு வத்திக்கானின் இலவச முடி திருத்தகம் ஆரம்பம்


பிப்.16,2015. வீடற்ற மக்களுக்கு மூன்று குளியல் அறை வசதிகளுடன், இலவச முடிதிருத்தம் செய்யும் வசதிகளையும் உள்ளடக்கிய வத்திக்கானின் உதவித்திட்டம் இத்திங்கள் முதல் செயல்படத் துவங்கியது.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத் தூண்கள் பகுதியில், வீடற்ற மக்களுக்கு மூன்று குளியல் அறைகளும், இலவச சிகை அலங்காரக் கடையும் பிப்ரவரி 16ம் தேதி இத்திங்களன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.

இத்தாலியில், வழக்கமாக, சிகை அலங்காரக் கடைகளுக்கு, திங்கள்கிழமை விடுமுறை என்பதால், தன்னார்வப் பணியாளர்கள், வத்திக்கான் ஏற்பாடு செய்துள்ள இக்கடையில் இலவசமாகப் பணிசெய்வதற்கு உதவியாக இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் தர்மச் செயல்களைச் செய்துவரும் பேராயர் Konrad Krajewski அவர்கள், உரோமையில் வீடற்ற ஒரு மனிதரின் பிறந்த நாளன்று அம்மனிதருடன் உணவருந்தியபோது இந்த எண்ணம் உருவாகியது. திருத்தந்தையும் அதற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.