2015-02-16 16:58:00

நோயாளியின் துன்பங்களில் இயேசுவும் பங்கெடுக்கிறார்


பிப்.16,2015 போதனைகள் வழங்குவதன் வழியாக அல்ல, மாறாக, துன்புறுவோரின் அருகேச் சென்று, அவர்களைத் தொட்டுக் குணப்படுத்துகிறார் இயேசு என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளைச் சபை உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த 50,000த்திற்கும் அதிகமான திருப்பயணிகளுக்கு, தொழுநோயாளர் ஒருவரை இயேசு தொட்டு குணமாக்கியப் புதுமை குறித்துப் பேசும் இஞ்ஞாயிறு நற்செய்தியை மையப்படுத்தி மூவேளை செப உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தனக்குப் பதிலாக வேறொருவரைக் கொண்டு, அவர் வழியாக இயேசு செயலாற்றுவதில்லை, மாறாக, அவரே நேரடியாக வந்து, தீயவற்றைத் தொட்டுக் குணமாக்குவதால், நம்மிடம் காணப்படும் தீமைகளே அவர் நம்மைத் தொடுவதற்கான வாய்ப்பாக மாறுகின்றன என்று திருத்தந்தை கூறினார்.

இயேசு, தொழு நோயாளரைக் குணப்படுத்தியப் புதுமையில், தொழு நோயாளரின் வேண்டுதல், இயேசுவின் பதிலுரை, மற்றும் குணப்படுத்தும் புதுமையின் விளைவு ஆகிய மூன்று விடயங்களைக் காண்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை, தன்னிடம் வேண்டிய நோயாளியின் துன்பங்களில் இயேசுவும் பங்கெடுப்பதைக் காணமுடிகிறது, ஏனெனில், சமூகத்தாலும், மதத்தாலும் ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு மனிதரை அவர் தொட்டு குணமாக்குகிறார் என்றுரைத்தார்.

ஒப்புரவு எனும் அருள் அடையாளத்திலும் இதுவே நிகழ்கிறது, ஏனெனில், பாவம் எனும் தொழுநோயைக் குணப்படுத்த நம்மை இயேசு தொடுகிறார் என்றும் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நம் பாவங்களைச் சுமந்து, நமக்கு விடுதலை வழங்குவதுபோல், அவரின் இரக்கம் நிறை அன்பின் கருவிகளாக நாம் மாறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.