2015-02-16 15:45:00

கடுகு சிறுத்தாலும் – கொடுக்கக் கொடுக்கத்தான் கிடைக்கும்


மகாகவி பாரதியார் கடையத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, அவரது உடையைப் பார்த்து பரிதாபப்பட்ட அந்த வீட்டு உரிமையாளர், பாரதியாருக்கு, ஒரு புதிய பத்து முழ வேட்டியையும், ஆறு முழத் துண்டையும் கொடுத்து உடுத்திக்கொள்ளச் சொன்னார். பாரதியாரும் அவற்றை வாங்கி உடுத்திக்கொண்டு உற்சாகமாக வெளியே வந்தார். அப்போது தெருவில் ஓர் ஏழை போர்த்திக்கொள்ள துணியின்றி, குளிரில் நடுங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த பாரதியார் மனமிரங்கி உடனே தனது துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, வேட்டியை அவிழ்த்து அந்த மனிதரைப் போர்த்திவிட்டார். பின்னர் மிகுந்த மகிழ்வுடன் வீட்டுக்குத் திரும்பிய பாரதியாரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வீட்டு உரிமையாளர், பாரதியாரிடம், நீங்கள் இடுப்பு வேட்டியை வைத்துக்கொண்டு துண்டைத் தானம் பண்ணியிருக்கலாமே என்று கேட்டார். அதற்கு பாரதியார், ஐயா, அந்த ஏழை வெளியில் இருக்கிறார், அதனால் அவருக்குக் குளிர் அதிகமாக இருக்கும், எனக்கென்ன, நான் வீட்டுக்குள்தானே இருக்கிறேன், இந்தத் துண்டு போதுமே என்று சொன்னார். மனது பொறாத அந்த வீட்டு உரிமையாளர் வீட்டுக்குள் உடனே ஓடிப்போய் இன்னொரு வேட்டியை எடுத்துவந்து பாரதியாரிடம் கொடுத்தார். அதனை உற்சாகமாக உடுத்திக்கொண்டே, கொடுக்கக் கொடுக்கத்தானய்யா வரும், பாருங்கள், நான் கொடுத்தவுடனேயே கடவுள் இன்னொன்றைக் கொடுக்கிறார் என்று சொன்னார் பாரதியார்.

தன்னிடம் இருப்பதை விடக்கூடாது என்று நினைக்கும் எந்த மனிதரும் ஏழையே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.