2015-02-14 15:28:00

மூன்று நாடுகளுக்கு முதல்முறையாக கர்தினால்கள்


பிப்.14,2015. கன்சிஸ்டரி என்ற கர்தினால்கள் அவையில் இதுவரை இடம்பெறாத மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் இச்சனிக்கிழமையன்று இடம்பெற்றுள்ளனர்.

மியான்மார், டோங்கா, கேப் வெர்தே ஆகிய நாடுகளைச் சார்ந்த பேராயர்கள் முதன்முறையாக கர்தினால்களாக உயர்த்தப்பட்டுள்ளது, திருஅவையின் உலகளாவியத் தன்மையை உண்மையிலேயே பிரதிபலிப்பதாக உள்ளது எனக் கருதப்படுகிறது.

மியான்மார் தலைநகர் யாங்கூன் பேராயர் சலேசிய சபையின் Charles Bo, பசிபிக் நாடாகிய டோங்கா ஆயர் Soane Mafi, கேப் வெர்தே நாட்டின் ஆயர் Arlindo Gomes Furtado ஆகிய மூவர் உட்பட இச்சனிக்கிழமையன்று புதிதாக கர்தினால்களாக உயர்த்தப்பட்டுள்ள இருபது பேரில் 15 பேர், புதிய திருத்தந்தை ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்கள். 14 நாடுகளைச் சேர்ந்த இவர்களில் மூவர் ஆசியர்கள், ஐவர் ஐரோப்பியர்கள், மூவர் இலத்தீன் அமெரிக்கர்கள், இருவர் ஆப்ரிக்கர்கள் மற்றும் இருவர் ஓசியானியாவைச் சார்ந்தவர்கள். புதியவர்களில் நால்வர் துறவு சபைகளைச் சார்ந்தவர்கள். இருவர் சலேசிய சபையினர், ஒருவர் லாசரிஸ்ட் சபையையும் மற்றவர் அகுஸ்தீன் சபையையும் சார்ந்தவர்கள்.

இப்புதியவர்களுடன் சேர்த்து தற்போது திருஅவையில் மொத்தம் 227 கர்தினால்கள் உள்ளனர். இவர்களில் 125 பேர் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்டவர்கள்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மொத்தம் 39 பேரை கர்தினால்களாக உயர்த்தியுள்ளார். தற்போது ஐரோப்பாவிலிருந்து 118, வட அமெரிக்காவிலிருந்து 27, தென் அமெரிக்காவிலிருந்து 26, ஆசியாவிலிருந்து 22, ஆப்ரிக்காவிலிருந்து 21, மத்திய அமெரிக்காவிலிருந்து 8, ஓசியானியாவிலிருந்து 5 என கர்தினால்கள் உள்ளனர்.

ஆதாரம்:வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.