2015-02-14 15:56:00

போக்கோ ஹாரம் அமைப்பால் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரிப்பு


பிப்.14,2015. போக்கோ ஹாரம் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, நைஜீரியாவின் எல்லைகளிலும், சாட், காமரூன், நைஜர் ஆகிய நைஜீரியாவின் எல்லையிலுள்ள நாடுகளிலும் தாக்குதல்களை நடத்திவருவதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா. புலம்பெயர்ந்தோர் நிறுவனம் கூறியுள்ளது.

நைஜீரியாவுக்குள்ளும், பிற நாடுகளிலும் புலம்பெயர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ள ஐ.நா.வின் UNHCR புலம்பெயர்ந்தோர் நிறுவனம், காமரூன் நாட்டின் வடக்கில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட நைஜீரிய மக்கள் முகாம்களில் வாழ்வதாகக் கூறியது.

கடந்த டிசம்பரில் ஏறக்குறைய 2 இலட்சம் மக்கள் சாட், காமரூன், நைஜர் உட்பட அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடினர் என்றும் அந்நிறுவனம் கூறியது.

இதற்கிடையே. சாட் நாடு அண்மையில் போக்கோ ஹாரம் அமைப்புக்கு எதிராக பிற நாடுகளுடன் சேர்ந்துள்ளதை முன்னிட்டு, இவ்வெள்ளி இரவில் முதன்முறையாக சாட் நாட்டில் தாக்குதலை நடத்தியுள்ளது போக்கோ ஹாரம் அமைப்பு.

ஆதாரம்: UN/வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.