2015-02-14 16:06:00

நைஜீரிய அரசின் ஊழலுக்கு எதிராக ஆயர் கண்டனம்


பிப்.14,2015. நைஜீரிய அரசின் கேவலமான ஊழல் நடவடிக்கைகளைக் கண்டித்துள்ள அதேவேளை, வருகிற மார்ச் 28ம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ள அந்நாட்டுத் தேர்தல், பெரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளது என அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.

நைஜீரியாவில், இம்மாதம் 14ம் தேதி நடைபெறுவதாய் திட்டமிடப்பட்டிருந்த பொதுத்தேர்தல் வருகிற மார்ச் 28ம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறித்து Aid to the Church in Need பிறரன்பு நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த ஆயர் Matthew Hassan Kukah அவர்கள், போக்கோ ஹாரம் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகள், நாட்டின் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பதட்டநிலைகளை அதிகரித்துள்ளன எனக் குறை கூறினார்.

நைஜீரியாவில் பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் ஊழல், அரசுக்கு நேர்மையாக இருப்பதன் உணர்வைக் குறைத்துள்ளது என்றும் ஆயர் Matthew குறிப்பிட்டார். 

ஏறக்குறைய 17 கோடி மக்களைக் கொண்டுள்ள மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், தெற்கில் கிறிஸ்தவர்களும், வடக்கில் முஸ்லிம்களும் அதிகமாக வாழ்கின்றனர்.

கிறிஸ்தவரான தற்போதைய அரசுத்தலைவர் ஜோனத்தான் குட்லக், முஸ்லிம் வேட்பாளர் முகமது புஹாரி ஆகிய இருவருக்குமிடையே இடம்பெற்ற கருத்து வேறுபாட்டால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: Zenit/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.