2015-02-14 14:37:00

குணப்படுத்துவது கடவுள்; பணம் வசூலிப்பது மருத்துவர்


Henry Mitchell என்ற பேராசிரியர் கடுமையான ஒரு நோயிலிருந்து குணமடைந்தார். குணமளித்த மருத்துவருக்கு அவர் நன்றி சொன்னபோது, அந்த மருத்துவர் தந்த பதில், பேராசியரை வியப்புறச் செய்தது. மருத்துவர் சொன்னது இதுதான்: "முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். அடுத்து, உங்களைச் சுற்றியிருந்து, செபித்தவர்களுக்காக நன்றி சொல்லுங்கள். நீங்கள் குணமடைந்ததில் என் பங்கு மிகக் குறைவே" என்று மருத்துவர் சொன்னதும், அவர் தேவையற்ற அளவு தாழ்ச்சியுடன் பேசுவதாக பேராசிரியர் Mitchell அவரிடம் சொன்னார். மருத்துவரோ மறுமொழியாக, "நான் சொல்வதை நீங்கள் நம்பாமல் போகலாம். ஆனால், இதுதான் உண்மை. மருத்துவர்களாகிய நாங்கள் யாரையும் குணப்படுத்துவது கிடையாது. குணமடைவதற்குத் தடையாக உங்களுக்குள் இருக்கும் கிருமிகளை நீக்குவதையே நாங்கள் திறம்படச் செய்கிறோம். மற்றபடி, நீங்கள் குணமடைவதென்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை" என்று கூறினார்.

இதைத்தான் புகழ்பெற்ற அறிஞர் ஒருவர் (Banjamin Franklin), வேறுவிதமாகக் கூறியுள்ளார்: "கடவுள் குணப்படுத்துகிறார்; குணப்படுத்தியதற்கான பணத்தை மருத்துவர் வசூல் செய்கிறார்" என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.