2015-02-13 15:58:00

வத்திக்கான் - மறையுரையாளர்களுக்கு வழிகாட்டி கையேடு


பிப்.13,2015. ஆலயம் செல்லும் பலர், அன்றையத் திருப்பலியில் தாங்கள் கேட்கும் மறையுரைகளை வைத்தே முழுத் திருப்பலியையும் கணிக்கின்றனர் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

மறையுரையாளர்களுக்கு வழிகாட்டி கையேடு ஒன்றை, பத்திரிகையாளர்களுக்கு வெளியிட்டுப் பேசிய, திருவழிபாட்டுத் திருப்பேராயத் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள் இவ்வாறு கூறினார்.

திருப்பலி நிச்சயமாக மறையுரை அல்ல என்றாலும், இறைவார்த்தையைக் கேட்பதற்கும், ஆண்டவரின் திருஉடல், திருஇரத்த உறவில் ஒன்றிப்பதற்குமான புனிதப் பேருண்மைகளில் பங்குகொள்வதன் நோக்கத்திற்கு ஏற்ற நேரமாக மறையுரையாற்றும் நேரம் உள்ளது என்று விளக்கினார் கர்தினால் சாரா.

மறையுரையானது, புனித நூல்களை, குறிப்பாக, நற்செய்தியை நேரடியாகத் தொடர்பு கொண்டதாக அமைந்து, அவற்றால் அது ஒளியூட்டப்படுவதாய் அமைய வேண்டுமெனவும், திருப்பணியாளர்களின் பணியின் தரத்தை உயர்த்துவதற்கு இக்கையேடு உதவும் எனவும் கூறினார் கர்தினால் சாரா.

மறையுரை என்பது, திருப்பணியாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட ஒரு திருவழிபாட்டு நிகழ்வு, இவர்கள், தங்கள் சொந்தப் பாணியில் இல்லாமல், திருஅவையின் விசுவாசத்திற்கேற்ப இறைவார்த்தைக்குப் பணிபுரிய அழைப்புப் பெற்றுள்ளனர் என்று  கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள் கூறினார்.

ஆதாரம்:வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.