2015-02-13 16:34:00

டிஜிட்டல் இந்தியா திட்டம் 5 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு


பிப்.13,2015. ''டிஜிட்டல் இந்தியா'' என்ற திட்டத்தின் மூலம் நாட்டில் ஐந்து கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரவிசங்கர் அவர்கள், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை முப்பது இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது என்றும், இந்தியாவை அறிவுசார் பொருளாதார நாடாக மாற்றும் நோக்கில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன என்றும், மக்கள் மிக எளிதாக தொழில்நுட்ப அடிப்படை கட்டமைப்பு மற்றும் அரசு சேவைகளைப் பெற வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம் என்றும் மேலும் தெரிவித்தார் அமைச்சர் ரவிசங்கர்.

குக்கிராமங்களிலும் கணனி, தொலைதொடர்பு வசதிகள் கிடைக்கும் பட்சத்தில் வேலை வாய்ப்புகள் பெருகும். இந்தியாவில் முதலீடு செய்ய நான்காயிரம் பேர் முன்வந்துள்ளனர். அவர்களில் அதிகம் பேர் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நகரமான சிலிக்கான் வேலியைச் சேர்ந்தவர்கள் என்று அமைச்சர் ரவிசங்கர் கூறினார்.

ஆதாரம்: PTI/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.