2015-02-13 16:02:00

ஐ.எஸ். அரசால் பாதிக்கப்பட்டவருடன் இரத்ததான தோழமையுணர்வு


பிப்.13,2015. ஐ.எஸ். இஸ்லாமிய நாட்டின் பயங்கரவாதிகளாலும், பிற ஆயுதம் ஏந்திய தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைபாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில், இரத்த தான முகாம் ஒன்றை நடத்தியுள்ளார் ஈராக் பேராயர் ஒருவர்.

கிர்குக் இயேசுவின் திருஇதய பேராலயத்தில் இச்செவ்வாயன்று இந்த இரத்த தான முகாமை நடத்தினார் கிர்குக் கல்தேய வழிபாட்டுமுறை பேராயூசிப் தாமஸ்.

மேலும், ஐ.எஸ். இஸ்லாமியப் பயங்கரவாதிகள் பற்றிய அச்சத்தில் வாழ்ந்துவரும் மக்கள் உரையாடல், மனித உரிமைகள் போன்ற வார்த்தைகளைக் கேட்டு களைத்திருக்கின்றனர் என்று ஈராக் அருள்பணியாளர் ஒருவர் கூறினார்.

ஈராக் முழுவதும் துன்பம் நிறைந்த சூழலையே காண முடிகின்றது என்று CNA செய்தி நிறுவனத்திடம் கூறிய அருள்பணி Rebwar Basa அவர்கள், தங்களின் அன்றாட வாழ்வை மகிழ்வாக வாழும் சூழலையும், அதற்கு உதவும் அரசியல்வாதிகளின் வெளிப்படையான மற்றும் தெளிவான செயல்களையும் பார்ப்பதற்கு மக்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.

ஈராக்கில் ஒவ்வொரு நாளும் அதிக அழிவுகளையும், துன்பத்தையும், குழப்பமான நிலையையுமே காண முடிகின்றது என்றும் உரைத்த அருள்பணி Basa அவர்கள், கடந்த ஆண்டில் தீவிரவாதிகள் ஆக்ரமிப்பைத் தொடங்கியபோது இருந்த நிலையும், தற்போது  ஐ.எஸ். ஆட்சியின்கீழ் காணப்படும் நிலையும் ஏறக்குறைய ஒரேமாதிரி உள்ளன என்றும் அக்குரு கூறினார்.

ஆதாரம்: Fides / CNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.