2015-02-13 16:14:00

உக்ரேய்ன்-கார்னிவால் விழாக்களை இரத்து செய்யுமாறு வேண்டுகோள்


பிப்.13,2015. கிழக்கு உக்ரெய்னில் பிப்ரவரி 15, இஞ்ஞாயிறு நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளவேளை, அந்நாட்டில் இடம்பெறும் போர் முழுவதுமாக முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் அந்நாட்டு ஆர்த்தடாக்ஸ் திருஅவைத் தலைவர்.

உக்ரெய்னில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தில், Belarus தலைநகர் மின்ஸ்க் நகரில் இப்புதன் இரவிலிருந்து 15 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக, போர் நிறுத்த ஒப்பந்தம் இவ்வியாழனன்று கையெழுத்திடப்பட்டது. கனரக பீரங்கிகளைப் பயன்படுத்துவதில்லை என்ற ஒப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள உக்ரெய்ன் ஆர்த்தடாக்ஸ் திருஅவைத் தலைவர் பேராயர் Onufra அவர்கள், பாரம்பரியமாகச் சிறப்பிக்கப்படும் கார்னிவால் விழாக்களுக்குப் பதிலாக நோன்பிருந்து செபிக்குமாறு கேட்டுள்ளார்.

தவக்காலம் தொடங்குவதற்கு முன்னர் சிறப்பிக்கப்படும் கார்னிவால் விழாக்களை நிறுத்தி, செப தவத்துடன் நாட்டின் அமைதிக்காகச் செபிக்குமாறு வலியுறுத்தியுள்ள பேராயர் Onufra அவர்கள், கிறிஸ்தவர்கள் ஒருவர் ஒருவரைக் கொலை செய்யக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.

கிழக்கு உக்ரேய்னில், இரஷ்ய ஆதரவு புரட்சியாளர்கள் புதிய தாக்குதல் ஒன்றைத் தொடங்கியதிலிருந்து அண்மை வாரங்களாக அப்பகுதியில் வன்முறை அதிகரித்துள்ளது.

மின்ஸ்க் நகரில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைகள், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளால் நடத்தப்பட்டது.

ஆதாரம்: AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.