2015-02-12 15:04:00

கடுகு சிறுத்தாலும் – தோற்றத்தை வைத்து எடை போடுவது ஏமாற்றும்


ஒருநாள் ஒருவர் தனது நான்கு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றதும் வாகனத்தின் ஒரு சக்கரம் பழுதாகியது. வாகனம் நகரவில்லை. அந்த இடத்தில் ஒரு மனநல மருத்துவமனை இருந்தது.  ஏதாவது பழுதுபார்க்கும் கடை இருக்கிறதா என்று அவ்விடத்தில் தேடினார் அவர். எதுமே இல்லாததால் அவரே அந்தச் சக்கரத்தைக் கழட்டி போல்ட்டையும் கழட்ட ஆரம்பித்தார். நான்கு போல்ட்டுகளையும் கழட்டி வைத்து விட்டு ஸ்டெப்னி எடுத்து வரும்போது, அவர் கால் இடறி நான்கு போல்ட்டுகளும்  அருகில் இருந்த சாக்கடையில் விழுந்துவிட்டன. எப்படி எடுக்கலாம் என்று சிந்தித்துகொண்டு இருந்தார். அப்போது அந்த மனநல மருத்துவமனையின் நோயாளி ஒருவர், அவரிடம் வந்து, ஏதாவது பிரச்சனையா டிரைவர் என்று கேட்டார். அந்த நோயாளியை சாக்கடையில் இறக்கிவிட்டு அவற்றை எடுக்கச் சொல்லலாம் என்று நினைத்து நடந்ததைக் கூறினார் அவர். உடனே அந்த நோயாளி, மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்டை கழட்டி,  இந்தச் சக்கரத்தில் மாட்டி, அருகில் உள்ள பழுதுபார்க்கும் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லாச் சக்கரத்திலும் மாட்டிக்கொள் என்று சொன்னார்.  உடனே அவர், இவ்வளவு தெளிவாகப் பேசும் நீங்கள், இந்த மனநல மருத்துவமனையில் எப்படி? என்று வியப்புடன் கேட்டார். அதற்கு அந்த நோயாளி, இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லாரும் முட்டாளும் இல்லை. வெளியில் இருக்கும் எல்லாரும் அறிவாளியும் இல்லை என்றார். ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடுவது எவ்வளவு தவறு. ஏழையின் ஆடைக்குள் உயர்வான இதயம் இருக்கலாம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.